வேறு வேறு கதைகளைக்கொண்ட படம் குட்டி ஸ்டோரி - விமர்சனம்


வேறு வேறு கதைகளைக்கொண்ட படம் குட்டி ஸ்டோரி -  விமர்சனம்
x
தினத்தந்தி 17 Feb 2021 10:00 AM GMT (Updated: 17 Feb 2021 10:00 AM GMT)

வேறு வேறு கதைகளைக்கொண்ட 4 குறும் படங்களின் தொகுப்பு, ‘குட்டி ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படமாக வந்து இருக்கிறது. முதல் குட்டி கதையின் பெயர், ‘எதிர்பாரா முத்தம்.’

கவுதம் வாசுதேவ் மேனனும், அமலாபாலும் நீண்டகால சினேகிதனும், சினேகிதியுமாக இருக்கிறார்கள். ஒரு காலகட்டத்துக்குப்பின் இருவரும் சந்திக்கிறார்கள். இரண்டு பேரும் நட்பா, காதலா? என்று பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அமலாபாலின் கன்னத்தில், கவுதம் வாசுதேவ் மேனன் முத்தம் கொடுத்து விடுகிறார். அந்த எதிர்பாரா முத்தம் பற்றி கவுதம் வாசுதேவ் மேனன் நண்பர்கள் அவருடன் கிண்டலாக விவாதிக்கிறார்கள்.

எதிர்பாரா முத்தத்துக்கு நட்புதான் காரணம் என்று கவுதம் மேனன் சொல்ல, இல்லையில்லை...காதலின் அடையாளம் என்று அவருடைய நண்பர்கள் விவாதிப்பது போல் முதல் கதை நீள்கிறது. இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனனே நடித்து டைரக்டு செய்திருக்கிறார்.

படத்தில், வசனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். மென்மையான பின்னணி இசையும், கவித்துவமான ஒளிப்பதிவும் படத்தை காப்பாற்றுகின்றன.

இரண்டாவது கதையை ‘அவனும் நானும்’ என்ற பெயரில் டைரக்டர் விஜய் இயக்கியுள்ளார். திருமணம் ஆகாத ஒரு பெண் தன் காதலனுடன் உறவு கொண்டதால் கர்ப்பமாகிறாள். இதனால் அந்த பெண்ணுக்கு ஏற்படும் அதிர்ச்சிகளையும், மனக்கவலையையும் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் விஜய். பாதிப்புக்குள்ளான அந்த பெண்ணாக மேகா ஆகாஷ் நடித்து இருக்கிறார். கதையை உள்வாங்கி கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார், மேகா ஆகாஷ்.

மூன்றாவது கதையின் பெயர், ‘லோகன்.’ இளம் கதாநாயகன் வருண், ‘ஆதாம்’ என்ற பெயரில், கம்ப்யூட்டர் கேம் விளையாடுகிறார். அதில் அவருக்கு ஒரு சினேகிதி கிடைக்கிறார். அவருடன் வருண் தன் காதலை சொல்ல முயற்சிக்கிறார். அவருடைய காதலை அந்த பெண் ஏற்றுக்கொண்டாளா, இல்லையா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

வருண், சங்கீதா, சாக்சி அஹர்வால் மூன்று பேரும் கதைக்கு பொருத்தமான தேர்வு. காதல், சோகம் இரண்டையும் மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார்கள். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார்.

நான்காவது கதைதான் படத்தின் சிறப்பு அம்சம். விஜய் சேதுபதிக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. மனைவிக்கு தெரியாமல் போன் மூலம் வேறு ஒரு பெண்ணுடன் காதல் வளர்க்க முயற்சிக்கிறார். இந்த ரகசியம், அவருடைய மனைவி அதிதி பாலனுக்கு தெரியவர- கோபத்தில்

கணவருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார். அதன் பலன் என்ன? என்பது உச்சக்கட்ட காட்சி.

நலன் குமாரசாமி டைரக்டு செய்திருக்கிறார். விஜய் சேதுபதி, அதிதி பாலன் ஆகிய இருவரும் நிஜமான கணவன்-மனைவியின் கோபதாபங்களை தங்கள் திறமையான நடிப்பின் மூலம் கண்முன் நடக்கும் சம்பவம் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். ‘குட்டி ஸ்டோரி’, ஒரு வித்தியாசமான முயற்சி.

Next Story