நூதன கொள்ளையர்களும், துப்பறிந்து பிடிக்கும் ராணுவ வீரரும் சக்ரா - விமர்சனம்


நூதன கொள்ளையர்களும், துப்பறிந்து பிடிக்கும் ராணுவ வீரரும்  சக்ரா - விமர்சனம்
x
தினத்தந்தி 22 Feb 2021 10:22 AM GMT (Updated: 22 Feb 2021 10:22 AM GMT)

போலீஸ் நெருங்க முடியாத அளவுக்கு அதிபுத்திசாலித்தனமாக அந்த கொள்ளைகள் நிகழ்ந்திருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். சக்ரா படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நாடே சுதந்திரதினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நகரில் 50 வீடுகளில் அடுத்தடுத்து முகமூடி கொள்ளை நடக்கிறது. அத்தனை வீடுகளும் வயதானவர்கள் வசிக்கும் குடியிருப்புகள். அதில், பரம்பரை பரம்பரையாக ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களை கொண்ட விஷாலின் வீடும் ஒன்று.

அவருடைய பாட்டி கே.ஆர்.விஜயாவை தாக்கிவிட்டு, நகை-பணத்துடன் அப்பாவின் வீரப்பதக்கமான சக்ராவையும் கொள்ளையர்கள் பறித்து சென்று விடுகிறார்கள். அதை கைப்பற்ற விஷால் தனது காதலியான போலீஸ் அதிகாரி ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் களத்தில் இறங்குகிறார்.

போலீஸ் நெருங்க முடியாத அளவுக்கு அதிபுத்திசாலித்தனமாக அந்த கொள்ளைகள் நிகழ்ந்திருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார்.

ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, அந்த கொள்ளைகளுக்கு மூளையாக இருந்தவரை அவர் நெருங்குகிறார். மூளையாக செயல்பட்டவர் யார்? என்பது, ‘சஸ்பென்ஸ்.’

ராணுவ வீரராக விஷால். கொள்ளையர்கள் பற்றி அவர் துப்பறியும் பாணி, அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது. ‘செஸ்’ விளையாட்டு மூலம் அவர் குற்றவாளியை நெருங்கும் விதம், படம் பார்ப்பவர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வருகிறது. சண்டை காட்சிகளில் எதிரிகளின் எலும்புகள் நொறுங்குவது, பதற்றம் கூட்டுகிறது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் வேடத்தில், கச்சிதம். ரெஜினா கசன்ட்ரா, அந்த சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். சிருஷ்டி டாங்கே ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார். கே.ஆர்.விஜயா பாட்டி வேடத்தில், சோகம் காட்டுகிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், இரவு நேர சென்னை நகரும், ஆள் நடமாட்டமில்லாத நிசப்தமான தெருக்களும், கண்கொள்ளா திகில்.

யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை, எங்கேயோ கேட்டது போல் இருக்கிறது. ஒரு ராணுவ வீரர் ஏன், எப்படி போலீஸ் அதிகாரி போல் துப்பறிகிறார்? என்பதற்கு வலுவான விளக்கத்தை கதையில் வைத்து இருக்கிறார், டைரக்டர் எம்.எஸ்.ஆனந்தன்.

திரைக்கதை ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம்...வேகம்...வேகம்.

இடையில் ரோபோ சங்கரின் வசன காமெடி, வேகமான கதையோட்டத்துக்கு தடையாக இருக்கிறது. ‘பிளாஷ்பேக்’கில் உருக்கம். ‘கிளைமாக்ஸ்’சில் எதிர்பாராத திருப்பம்.

Next Story