முள் காடுகள் நிறைந்த நடுக்காவேரி என்ற கிராமம்தான் கதைக்களம். அந்த கிராமத்தை சேர்ந்த மாணவி, கமலி. கமலி பிரம் நடுக்காவேரி படத்தின் சினிமா விமர்சனம்.
சத்தான கதையும், ஜீவனுள்ள கதாபாத்திரங்களும் அமைந்த படம். முள் காடுகள் நிறைந்த நடுக்காவேரி என்ற கிராமம்தான் கதைக்களம். அந்த கிராமத்தை சேர்ந்த மாணவி, கமலி. பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறாள். அவளைப்போல் இறுதி ஆண்டில் படித்து மாநிலத்திலேயே முதல் மாணவராக தேறிய அஸ்வின் என்ற மாணவர் டி.வி.யில் பேட்டி கொடுக்கிறார்.
அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கப்போவதாக அவர் கூறுகிறார். அவருடைய அழகில் மயங்கிய கமலி தானும் சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள்.
‘‘ஐ.ஐ.டி.யில் படிக்க இடம் கிடைப்பது அவ்வளவு எளிது அல்ல’’ என்று பள்ளி ஆசிரியர் இமான் அண்ணாச்சி கூறுகிறார். அவருடைய வழிகாட்டுதலின்படி, அதே கிராமத்தில் வசிக்கும் கண்டிப்பான ஆசிரியர் பிரதாப்போத்தனிடம், கமலி ஐ.ஐ.டி. பயிற்சிக்கு சேருகிறாள். நுழைவு தேர்வில் அதிக மார்க் வாங்கி, ஐ.ஐ.டி.யில் சேருகிறாள்.
அதன் பிறகு அவள் காதலில் வெற்றி பெற்றாளா அல்லது படிப்பில் கவனம் செலுத்தினாளா? என்பது மீதி கதை.
கமலியாக ஆனந்தி. அந்த கதாபாத்திரத்துக்காகவே உருவானவர் போல் அத்தனை பொருத்தம். குறும்புத்தனமான மாணவியாக அறிமுகமாகும் அவருக்குள் அஸ்வின் மீது இனக்கவர்ச்சி ஏற்படுவதையும், ‘‘சிண்ட்ரெல்லா’’ என்று சக மாணவர்களால் கேலி செய்யப்பட்டு அவமானத்தில் கூனிக்குறுகுவதையும் ஆனந்தி தன் நடிப்பில் மிக இயல்பாக கொண்டு வந்திருக்கிறார்.
அவருடைய அப்பா சண்முகமாக அழகம்பெருமாள், கண்டிப்பான ஆசிரியர் அறிவுடைநம்பியாக பிரதாப்போத்தன், கலகலப்பான ஆசிரியர் சுப்பிரமணியாக இமான் அண்ணாச்சி என எல்லா கதாபாத்திரங்களும் உயிரோட்டமாக அமைந்துள்ளன.
தீனதயாளனின் இசையில், அனைத்து பாடல்களிலும் வசன நடை. அதனால் பாடல்களில் ஈர்ப்பு இல்லை. பின்னணி இசையிலும், ஜெகதீசன் லோகயன் ஒளிப்பதிவிலும் கிராமத்து யதார்த்தங்கள், மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராஜசேகர் துரைசாமி டைரக்டு செய்திருக்கிறார். இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களில், விறுவிறுப்பை எதிர்பார்க்கக் கூடாது என்ற விதிவிலக்கு இந்த படத்துக்கு மிகவும் பொருந்தும். படத்தின் ஆரம்ப காட்சிகள், ஒரு உதாரணம்.
‘‘முள் காடுகள் நிறைந்த நம் ஊரில் இருந்து கொண்டு பட்டணத்து மாணவர்களுடன் போட்டி போட நினைப்பது பேராசை’’ என்ற வசன வரிகளில், ஒரு கிராமத்து மாணவியின் வேதனை தெரிகிறது.
ஒவ்வொரு மாணவரும், மாணவியும் பார்க்க வேண்டிய படம்.