ஒரு தாதாவுக்கும், அவரிடம் அடியாளாக இருக்கும் ஒரு இளைஞருக்குமான கதை, இது வேட்டை நாய் - விமர்சனம்


ஒரு தாதாவுக்கும், அவரிடம் அடியாளாக இருக்கும் ஒரு இளைஞருக்குமான கதை, இது வேட்டை நாய் - விமர்சனம்
x
தினத்தந்தி 27 Feb 2021 9:42 PM GMT (Updated: 27 Feb 2021 9:42 PM GMT)

கருத்த உருவம், முரட்டு உடற்கட்டு, முறுக்கு மீசை சகிதம் அடியாள் வேடத்துக்கு நூறு சதவீதம் பொருந்துகிறார், ஆர்.கே.சுரேஷ்.

தாதா ராம்கி. அடியாள் ஆர்.கே.சுரேஷ். ராம்கி நடத்தும் கட்ட பஞ்சாயத்தில், அவருடைய குறிப்பறிந்து ஆர்.கே.சுரேஷ் தாக்குதல் நடத்துகிறார். அதனால் ஆர்.கே.சுரேசை தனது நம்பிக்கைக்குரிய அடியாளாக ராம்கி வைத்து இருக்கிறார்.

இந்த நிலையில், ஆர்.கே.சுரேசுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடுகிறார், அவருடைய அத்தை ரமா. தூரத்து உறவுப்பெண் சுபிக்சா மணப்பெண்ணாக அமைகிறார். அவருக்கு கணவர் ஒரு தாதாவின் அடியாளாக இருப்பது பிடிக்கவில்லை. அடியாள் வேலைக்கு போகும் கணவரை தடுத்து நிறுத்துகிறார்.

மனைவி சொல்லை கேட்டு ஆர்.கே.சுரேஷ் ஒரு மலையாள இளைஞரிடம் கவுரவமான வேலையில் சேருகிறார். அவருடைய வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. அந்த வேலையில் இருந்து விலகி, மீண்டும் ராம்கியிடம் வேலைக்கு சேர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆர்.கே.சுரேஷ் என்ன முடிவு எடுக்கிறார்? என்பது உச்சக்கட்ட காட்சி.

கருத்த உருவம், முரட்டு உடற்கட்டு, முறுக்கு மீசை சகிதம் அடியாள் வேடத்துக்கு நூறு சதவீதம் பொருந்துகிறார், ஆர்.கே.சுரேஷ். எதிரிகளை பந்தாடும் சண்டை காட்சிகளில், அவருடைய ஆக்ரோஷம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பெண் பார்க்கப் போன இடத்தில் சுபிக்சாவின் அழகில் மயங்கி அவரையே மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்படும் காட்சியில், அவர் முகமெல்லாம் காதல் ரேகைகள்.

தாதா வேடத்தில் ராம்கியின் கெத்து, ரசிக்க வைக்கிறது. சுபிக்சா, சுமாரான அழகி. இவருடைய அழகை விட, நடிப்புக்கு கூடுதல் மார்க் கொடுக்கலாம். முன்னாள் கதாநாயகி ரமா அத்தை வேடத்தில், இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அசல் குடிகாரராக நமோ நாராயணன்.

கணேஷ் சந்திரசேகரன் இசையில் பாடல்கள், மனம் கவரவில்லை. பின்னணி இசையில், சில இடங்களில் வாத்தியங்களின் இரைச்சல். முனிஷ் ஈஸ்வரனின் ஒளிப்பதிவில், கிராமத்து அழகு.

எஸ்.ஜெய்சங்கர் டைரக்டு செய்து இருக்கிறார். குடிகார ரவுடி கதை புதுசு அல்ல. கதாநாயகி சுபிக்சா அறிமுகமாகிற வரை திரைக்கதையில், வேகக்குறைவு. அப்புறம் எதிர்பாராத திருப்பங்களும், அடுத்த காட்சி என்ன? என்ற எதிர்பார்ப்பும் கதையை வேகமாக நகர்த்தி செல்கின்றன.

Next Story