ஆக்‌ஷன் நிறைந்த கார் பந்தயம் : ‘மட்டி’ சினிமா விமர்சனம்


ஆக்‌ஷன் நிறைந்த கார் பந்தயம் : ‘மட்டி’ சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 20 Dec 2021 1:16 PM GMT (Updated: 20 Dec 2021 1:16 PM GMT)

மட்டி ரேஸ் எனப்படும் ஆபத்து நிறைந்த மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்திய முதல் இந்திய திரைப்படம்.

ஹாலிவுட்டில் மட்டுமே இதுபோன்ற பந்தய காட்சிகள் நிறைந்த படங்களை அடிக்கடி பார்க்க முடியும். இந்தியாவின் முதல் மட்டி ரேஸ் படம், இது.

இதில் கனவு பாடல், காமெடி என வழக்கமான மசாலாக்கள் இல்லை. கதை எளிமையானது. அண்ணன் - தம்பி இருவரும் ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். கல்லூரியில் ஒரு விவகாரத்தில் தம்பி, வில்லனை சீண்டுகிறார். ‘‘உன்னை மட்டி ரேசில் ஜெயித்து எப்படி அழிக்கிறேன், பார்’’ என்று வில்லன் சபதம் எடுக்கிறார். இந்த நிலையில், தம்பியை காப்பாற்ற அண்ணன் வருகிறார். அண்ணன் - தம்பி இருவரும் சேர்ந்து மட்டி ரேசில் வில்லனை எப்படி ஜெயிக்கிறார்கள்? என்பதே கதை.

ரிதன், புதுமுகம் கார்த்தி இருவரும் அண்ணன் - தம்பியாக வருகிறார்கள். (நிஜ வாழ்க்கையிலும் இருவரும் அண்ணன் - தம்பியாம்) இரண்டு பேரும் சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள். மலைப்பகுதிகளில் கார் ஓட்டும்போதும், வில்லனுடன் சண்டை காட்சிகளிலும், ரிதன் ஹாலிவுட் ஹீரோக்களை நினைவூட்டுகிறார். தம்பிக்காக அவர் பந்தய களத்தில் இறங்கும்போது, தியேட்டரில் கரகோசம்.

அண்ணனுடன் முரண்படும்போதும், முகம் மலரும்போதும் கார்த்திக், கவனம் ஈர்க்கிறார். கதாநாயகிகள் அனுசா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகிய இருவருக்கும் பெரிதாக வேலை இல்லை.

அடர்ந்த காடுகளிலும், மலை முகட்டிலும் கார்கள் ஒன்றை ஒன்று முந்த முயற்சிக்கும்போது, கே.ஜி.ரதீசின் கேமரா ஓடி ஓடி உழைத்து இருக்கிறது. பிரகபல் இயக்கியிருக்கிறார். உச்சக்கட்ட காட்சியில் காட்டிய பரபரப்பை படம் முழுவதும் காட்டியிருந்தால், இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும்.


Next Story