கடன் வாங்குவது தப்பு : ‘தேள்' சினிமா விமர்சனம்


கடன் வாங்குவது தப்பு : ‘தேள் சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 16 Jan 2022 10:17 AM GMT (Updated: 16 Jan 2022 10:17 AM GMT)

படத்தின் மையப் புள்ளி என்னவென்றால் கடன் வாங்குவதும் தப்பு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் தப்பு என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதை அமைந்திருக்கிறது.

அடிதடி சண்டை கதைக்குள் அம்மா பாசத்தை கலந்து இருக்கிறார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டி தொழில் நடத்தும் ஒரு தாதாவிடம் அடியாளாக இருக்கிறார், பிரபுதேவா. பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாதவர்களை பிரபுதேவா அடித்து உதைத்து துவம்சம் செய்கிறார்.

அந்த தாதாவிடம் படிப்புக்காக பணம் வாங்கிய ஒருவனால் திருப்பிக் கொடுக்க முடியாததால் அவனை பொதுவெளியில் பிரபுதேவா அடித்து உதைக்கிறார். அவமானம் தாங்காமல் அந்த இளைஞன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

இந்த சம்பவத்துக்குப்பின், பிரபுதேவா வாழ்க்கையில் திருப்பம் வருகிறது. அவருடைய அம்மா என்று கூறிக்கொண்டு ஈஸ்வரிராவ் வருகிறார். அவரை பிரபுதேவா அடித்து விரட்டுகிறார். அவரை துரத்தி துரத்தி ஈஸ்வரிராவ் அம்மா பாசத்தை காட்டுகிறார்.அவருடைய தாய்ப்பாசம் உண்மையா, பொய்யா? என்பதற்கு விடை, கிளைமாக்சில் இருக்கிறது.அடியாள் வேடத்துக்கு பிரபுதேவா பொருந்துகிறார். சண்டை காட்சிகளில் இதுவரை இல்லாத வேகம் காட்டியிருக்கிறார். அவருக்கும், கதாநாயகிக்கும் இடையேயான காதல் பொருந்தவில்லை. யோகி பாபுவும், இமான் அண்ணாச்சியும் அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார்கள். மாரிமுத்து ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார்.

அம்மா வேடத்தில் வரும் ஈஸ்வரிராவிடம் ஒப்பனையையும் மீறி, இளமை எட்டிப்பார்க்கிறது. ஹரிகுமார் இயக்கியிருக்கிறார். காட்சி அமைப்பில் காட்டியிருக்கும் வித்தியாசத்தை திரைக்கதையிலும் காட்டியிருந்தால், படம் பேசப்பட்டிருக்கும்.


Next Story