காவல் அதிகாரியின் நேர்மை: ‘வலிமை' சினிமா விமர்சனம்


காவல் அதிகாரியின் நேர்மை: ‘வலிமை சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 25 Feb 2022 9:50 AM GMT (Updated: 25 Feb 2022 9:50 AM GMT)

போதை மருந்து வினியோகிக்கும் கும்பலை பிடிக்க போராடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை. இந்த மெயின் கதைக்குள் குடும்ப பாசம் என்ற கிளை கதையை நுழைத்து நெகிழவும் வைத்து இருக்கிறார்கள்.

ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு குற்றங்கள் அடிக்கடி நடக்கிறது. மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலி பறிக்கும் அந்த மர்ம கும்பல் நகரில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு புறம், வேலையில்லாத இளைஞர்களுக்கு போதை மருந்து பழக்கத்தை ஏற்படுத்தி, போதை உலகின் தலைவனாக இருக்கிறான், ஒரு ஆசாமி.

அவனை பிடிக்கும் வேலை நேர்மையும், துணிச்சலும் மிகுந்த போலீஸ் அதிகாரி அஜித்குமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. போதை மருந்து வினியோகிக்கும் அந்த குற்றவாளியை பிடிக்க அஜித்குமார் இரவு-பகலாக போராடுகிறார். அப்போது அவருடைய தம்பிக்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருக்கும் உயர் போலீஸ் அதிகாரி ஜி.எம்.சுந்தர், அஜித்குமாருக்கு எதிராக செயல்படுகிறார். அவருடைய சதித்திட்டத்தால் அஜித்குமார் பதவி இறக்கம் செய்யப்படுகிறார். இருப்பினும் அவர் போதை மருந்து கும்பலை எதிர்த்து போராடி, அந்த கும்பலை எப்படி அழிக்கிறார்? என்பது மீதி கதை. சமீபகால படங்களில் சாம்பல் நிற சிகை அலங்காரத்துடனும், வெள்ளை தாடி-மீசையுடனும் வந்த அஜித்குமார், இந்த படத்தில் தோற்றத்தை மாற்றி, ‘அழகான அஜித்குமார்’ ஆகியிருக்கிறார். அவருடைய ‘பைக்’ சாகசங்களும், உயிர் பணயம் வைத்த சண்டை காட்சிகளும் படத்தின் சிறப்பு அம்சங்கள். படத்தில் காதல் இருக்கிறது. காதலியாக ஹூமா குரேசி வருகிறார். ஆனாலும் டூயட் இல்லை.

வில்லன் கார்த்திகேயா தமிழ் பட உலகுக்கு புதுசு. அவர் வரும் காட்சிகள், ஆந்திரா மிளகாய் போன்ற காரம்.

சுமித்ராவின் தாய்ப்பாசமும், இளைய மகன் ராஜ் அய்யப்பனை எண்ணி அவர் உருகும் காட்சிகளும் கண்களை நனைய வைக்கின்றன.

ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். பின்னணி இசையில், வாத்தியங்கள் அலறுகின்றன. ஒளிப்பதிவாளர் நீரவ்சா திறமை காட்டியிருக்கிறார். அதிவேக கார் துரத்தல் காட்சிகளும், ஆகாயத்தில் ‘பைக்’குகளின் சாகசங்களும் ஆச்சரியப்படுத்துகின்றன.

எச்.வினோத் டைரக்டு செய்து இருக்கிறார். படம் ஆரம்பித்து அரை மணி நேரம் வரை மெதுவான கதையோட்டம். அப்புறம் வேகம் பிடிக்கும் கதை இடைவேளை வரை சூப்பர் ஓட்டம். பரபரப்பான திரைக்கதை. இடைவேளைக்குப்பின், அஜித்குமார்-அம்மா சுமித்ரா தொடர்பான காட்சிகளும், வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. உச்சக்கட்ட காட்சி, மிரட்டல். படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.


Next Story