சாதிய வன்மம் - "நதி" சினிமா விமர்சனம்


சாதிய வன்மம் - நதி சினிமா விமர்சனம்
x
நடிகர்: சாம்ஜோன்ஸ், கரு.பழனியப்பன், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி நடிகை: கயல் ஆனந்தி  டைரக்ஷன்: மு.தாமரைசெல்வன் இசை: திபு நினன் தாமஸ் ஒளிப்பதிவு : எம்.எஸ்.பிரபு

சாதி வெறியர்களிடம் சிக்கிய ஒரு காதல் ஜோடியை பற்றிய கதை.

சாம் ஜோன்சும், 'கயல்" ஆனந்தியும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்-மாணவி. இருவரும் நட்பாக பழகுகிறார்கள். இவர்களின் நட்பை ஆனந்தியின் குடும்பத்தினர் சந்தேகிக்கிறார்கள். அதுவே அவர்கள் இடையே காதலை ஏற்படுத்தி விடுகிறது.

ஆனந்திக்கு அவசரமாக திருமணம் முடிக்க குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். அவர்களுக்கு நேர்மாறாக சாம் ஜோன்சுடனான காதலில் ஆனந்தி உறுதியாக இருக்கிறார்.

ஆனந்தியின் குடும்பத்தினர் தங்கள் கவுரவத்தை காப்பாற்ற ஆனந்தியையும், அவருடைய காதலரையும் தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறார்கள். ஆனந்தி அவருடைய உறவினரும், அரசியல்வாதியுமான கரு.பழனியப்பனிடம் தஞ்சம் அடைகிறார். "என்னை நீ திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், உன் காதலனை காப்பாற்றுகிறேன்'' என்று கரு.பழனியப்பன் நிபந்தனை விதிக்கிறார். அதற்கு ஆனந்தியும் சம்மதிக்கிறார். இரண்டு பேருக்கும் திருமணம் நடந்ததா, ஆனந்தியின் காதலர் என்ன ஆகிறார்? என்பது மீதி கதை.

கதாநாயகன் சாம் ஜோன்ஸ் அப்பாவி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். காதல் உணர்வை முகத்துக்கு கொண்டுவர இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும். ஆனந்தியும், அவருடைய நடிப்பும் தான் இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள். சாம் ஜோன்சுடன் காதல், பெற்றோர்களுடன் மோதல் என சகல உணர்வுகளையும் இயல்பாக காட்டுகிறார்.

சிரித்துக்கொண்டே கழுத்தை அறுக்கும் கபடதாரியான அரசியல்வாதி வேடத்தில், கரு.பழனியப்பன் அமர்க்களப்படுத்துகிறார். சாம் ஜோன்சுக்கு அப்பாவாக முனிஷ்காந்த், ஒரு பாசமுள்ள அப்பாவாக நிறைய இடங்களில் நெகிழ வைக்கிறார். ஆனந்தியின் அப்பாவாக ஏ.வெங்கடேஷ், துணை வில்லனாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

திபுநினன் தாமஸ் பின்னணி இசையும், எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், கதையோட்டத்துக்கு வேகம் சேர்க்கின்றன. டைரக்டர் தாமரை செல்வன் விறுவிறுப்பாக கதை சொல்லி இருக்கிறார். படத்தின் உச்சக்கட்ட காட்சி, நெஞ்சை கனக்க வைக்கிறது. சாதி வெறியை கருவாக கொண்ட படங்களின் வரிசையில், 'நதி'யும் சேர்ந்து இருக்கிறது.


Next Story