சினிமா விமர்சனம்: திருவின் குரல்


சினிமா விமர்சனம்: திருவின் குரல்
x
நடிகர்: அருள்நிதி நடிகை: ஆத்மிகா  டைரக்ஷன்: ஹரிஷ் பிரபு இசை: சாம் சி.எஸ். ஒளிப்பதிவு : சிண்டோ பொடுதாஸ்

வாய் பேச இயலாத ஹீரோ அருள்நிதி சிவில் என்ஜினீயர். அவருடைய அப்பா பாரதிராஜா கட்டிட சூப்பர்வைசராக இருக்கிறார். அருள்நிதியின் முறைப் பெண் ஆத்மிகா. பில்டிங் வேலை நடக்கும் இடத்தில் ஏற்படும் விபத்தில் பாரதிராஜாவுக்கு தலையில் அடிபடுகிறது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பற்ற குடும்பம் போராடுகிறது. அப்போது ஆஸ்பத்திரியில் இருக்கும் சில சமூக விரோத கொலைகார கும்பலுக்கும், அருள்நிதிக்கும் மோதல் ஏற்பட்டு குடும்பத்துக்கு ஆபத்து சூழ்கிறது. குடும்பத்தினரை காப்பாற்றினாரா? வில்லன்கள் முடிவு என்ன? என்பது கதை.

ஹீரோக்கள் நடிக்க தயங்கும் காது கேளாத வாய்பேச இயலாத கதாபாத்திரத்தை அருள்நிதி சவாலாக ஏற்றுகொண்டு கேரக்டருக்கு நூறு சதவீதம் நியாயம் செய்திருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டலாம். வாய்பேச முடியாதவராக இருந்தாலும் கண்களால் அப்பா மீது வைத்துள்ள பாசத்தையும், எதிரிகள் மீதுள்ள கோபத்தையும், முறைப்பெண் மீதான காதலையும் பிரமாதமாக வெளிப்படுத்துகிறார். கட்டுமஸ்தான தேகத்தால் சமூக விரோதிகளை பந்தாடுகிறார். படம் முழுக்க பேசாமலேயே யதார்த்தமாக நடித்து ஹீரோ இமேஜுக்கு பங்கம் வராமல் பார்த்துகொள்கிறார்.

ஆத்மிகா குறைவான காட்சிகளில் வந்தாலும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார்.

அப்பாவாக வரும் பாரதிராஜா நோயாளியாக, மகன் மீது பாசத்தைக் கொட்டுபவராக தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஆஸ்பத்திரி கழிவறையில் வழுக்கி விழும் காட்சி பதற வைக்கிறது.

அக்காவாக வரும் சுபத்ரா, அவருடைய மகளாக வரும் பேபி மோனிகா ஆகிய இருவருடைய முகத்தில் துளியும் சினிமாத்தனம் இல்லை. அவ்வளவு தேர்ந்த நடிப்பு.

லிப்ட் மேனாக வரும் அஷ்ரப், வார்ட் பாயாக வரும் ஜீவா, வாட்ச்மேனாக வரும் ஹரி, பிணவறை உதவியாளராக வரும் மகேந்திரன் ஆகியோர் எந்த நேரமும் முகத்தில் வில்லத்தனத்தை தேக்கி வைத்து படம் பார்ப்பவர்களை அச்சத்திலேயே வைத்திருப்பதில் அவர்களின் நடிப்பு திறமை பளிச்சிடுகிறது

ஆஸ்பத்திரி ஊழியர்களின் கொலை, கொள்ளை அட்டூழியங்களை நிர்வாகம் அறியாமல் இருப்பது, போலீஸ் துறையின் கவனத்துக்கு வராதது போன்றவை திரைக்கதையின் பலகீனம்.

சாம் சி.எஸ். இசையில் வைரமுத்து எழுதியுள்ள 'வா தாரகையே' பாடல் புத்தம் புது தென்றலாக மனதை லேசாக்குகிறது. 'அப்பா என் அப்பா' பாடல் கல் மனதையும் கரையச் செய்யும் ரகம். தந்தையர் தியாகத்தின் தேசிய கீதமாகவும் ஒலிக்கிறது. பின்னணி இசை படத்தை தாங்கி பிடிக்கிறது.

ஒளிப்பதிவாளர் சிண்டோ பொடுதாஸ் ஆஸ்பத்திரியை அங்குலம் அங்குலமாக படம் பிடித்துள்ள விதம் அருமை.

அப்பாவை காப்பாற்ற போராடும் மகன் என்ற ஒற்றை வரி கதையை ஆக்சன், சென்டிமெண்ட், காதல் என குடும்பத்துடன் ரசிக்கும்படியாக ஜனரஞ்சகமான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் பிரபு. பொது ஆஸ்பத்திரியில் சாதாரண நோயாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் போகிற போக்கில் சொல்லி கவனிக்க வைக்கிறார்.


Next Story