குஷி - சினிமா விமர்சனம்


குஷி - சினிமா விமர்சனம்
x
நடிகர்: விஜய்தேவரகொண்டா நடிகை: சமந்தா  டைரக்ஷன்: சிவா நிர்வாணா இசை: ஹசீம் அப்துல் வகாம் ஒளிப்பதிவு : ஜி.முரளி

நாத்திகவாதியின் மகன் விஜய் தேவரகொண்டாவும், ஆன்மீகவாதி மகள் சமந்தாவும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.

விஜய்தேவரகொண்டா ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதற்கு அவர் தனது தந்தையுடன் உட்கார்ந்து பரிகார யாகம் செய்தால் திருமணத்தை நடத்தலாம் என்றும் சமந்தாவின் தந்தை நிர்ப்பந்திக்கிறார். இதை ஏற்க விஜய் தேவரகொண்டா தந்தை மறுக்கிறார்.

இதனால் விஜய்தேவரகொண்டாவும் சமந்தாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள்.

சமந்தா கர்ப்பமாகி கரு கலைந்து விடுகிறது. இதற்கு பரிகார யாகம் செய்யாததுதான் காரணமோ என்று குழம்புகிறார். அதன்பிறகு கணவன் மனைவி இடையே தகராறு, சச்சரவுகள் ஏற்பட்டு பிரிகிறார்கள்.

யாகம் நடந்ததா? கணவன் மனைவி சேர்ந்தார்களா? என்பது மீதி கதை.

காதல் கதைக்கு பொருத்தமானவர் என்பதை விஜய்தேவரகொண்டா மீண்டும் நிரூபித்து உள்ளார். சமந்தாவை காஷ்மீரில் பார்த்து மயங்குவது, துரத்தி துரத்தி காதலிப்பது, ரெயிலில் காதலை சொல்வது, திருமணத்துக்கு பிறகு மனைவியுடன் தகராறு, கெஞ்சல் என்று கதாபாத்திரத்தை ரசித்து செய்துள்ளார்.

சமந்தா, அழகில் வசீகரிப்பதோடு கணவருடன் சண்டை, கோபம், அழுகை என்று உணர்வுகளை கொட்டி நடித்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார்.

சச்சின் கேத்கர், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, லட்சுமி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் ஜெயராம், ரோகிணி, கிஷோர், ரகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.

சில காட்சிகளை முன்கூட்டி யூகிக்க முடிவது பலகீனம்.

ஜி.முரளியின் ஒளிப்பதிவில் காஷ்மீரின் குளுமையும், வனப்பும் கண்களில் நிற்கின்றன. ஹசீம் அப்துல் வகாமின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நல்ல விருந்து. 'என் ரோஜா நீயே...' 'ஆராத்யா...' பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன.

இரு வேறு மனோபாவம் கொண்ட குடும்பத்து காதல் ஜோடிகளின் வாழ்க்கையில் நிகழும் சச்சரவுகள் உறவுகளின் பிணைப்புகள் போன்றவற்றை அழுத்தமான திரைக்கதையில் உணர்வுப்பூர்வமாக படமாக்கி உள்ளார் இயக்குனர் சிவா நிர்வாணா. கிளைமாக்ஸ் கைதட்ட வைக்கிறது.


Next Story