சினிமா விமர்சனம் - லக்கி மேன்


சினிமா விமர்சனம் - லக்கி மேன்
x
நடிகர்: யோகி பாபு,வீரா நடிகை: ரேச்சல் ரெபக்கா  டைரக்ஷன்: பாலாஜி வேணுகோபால் இசை: ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு : சந்தீப் கே.விஜய்

தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடைத்தரகராக வேலை பார்ப்பவர் யோகி பாபு. இவரது மனைவி ரேச்சல் ரெபக்கா, மகன் சாத்விக். போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார் யோகிபாபு.

சிறுவயதில் இருந்தே தான் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்ற தாழ்வு மனநிலையில் இருக்கிறார்.

எதிர்பாரதவிதமாக யோகி பாபுக்கு, குலுக்கல் சீட்டில் கார் பரிசாக கிடைக்கிறது. அந்த கார்தான் தனது முதல் அதிர்ஷ்டம் என்று கொண்டாடுகிறார். தொடர்ந்து தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றமும் காண்கிறார்.

ஒருநாள் யோகி பாபுக்கும், போலீஸ் அதிகாரி வீராவுக்கும் சிறிய பிரச்சினை ஏற்படுகிறது. இந்த நிலையில், யோகி பாபு லக்கி என்று நினைக்கும் கார் திடீரென்று காணாமல் போகிறது. அதன்பின் குடும்பம் பிரிகிறது. யோகி பாபுக்கு கார் கிடைத்ததா? பிரிந்த மனைவியுடன் சேர்ந்தாரா? என்பது மீதி கதை.

கதையின் நாயகனாக வரும் யோகி பாபுவுக்கு மொத்த கதையை தாங்கும் அழுத்தமான கதாபாத்திரம். அதை தனது தேர்ந்த நடிப்பால் மெருகேற்றி இருக்கிறார்.

வறுமையில் விரக்தி, கார் பரிசாக கிடைத்த சந்தோஷத்தில் பூரிப்பு, அது திருட்டு போனதும் தவிப்பு, போலீசுடன் நக்கல் பேச்சு என கிடைக்கும் இடங்களில் எல்லாம் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கமான நகைச்சுவையிலும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.

ரேச்சல் ரெபக்கா, இயல்பான நடிப்பு மூலம் கவர்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் வீரா மிடுக்காக வருகிறார்.

சில காட்சிகள் நாடகத்தனமாய் நகர்வது பலகீனம்.

அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்களின் வாழ்வியல் கதையை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி உள்ளார் பாலாஜி வேணுகோபால். வசனங்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து, அவர்களிடம் சரியாக வேலையும் வாங்கி இருப்பது சிறப்பு

சந்தீப் கே.விஜய்யின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பலம்.


Next Story