பரோல்: சினிமா விமர்சனம்


பரோல்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஆர்.எஸ்.கார்த்திக் நடிகை: கல்பிக்கா, மோனிஷா முரளி  டைரக்ஷன்: துவாரக் ராஜா இசை: ராஜ்குமார் அமல் ஒளிப்பதிவு : மகேஷ் திருநாவுக்கரசு

அம்மாவுக்கும், இரண்டு மகன்களுக்குமான உறவை சித்தரிக்கிறது கதை.

தந்தையை இழந்தவர்கள் லிங்கா, ஆர்.எஸ்.கார்த்திக். இவர்களின் தாய் ஜானகி சுரேஷ். சிறுவயதிலேயே ஒருவனை கொலை செய்து சிறைக்கு செல்லும் லிங்கா அங்கும் சண்டை, கொலை என்று ரவுடித்தனத்தை தொடர்கிறார். சில வருடங்களுக்கு பிறகு வெளியே வந்தும் வெறியாட்டம் அடங்காமல் கொலை பட்டியல் நீள்கிறது. இதனால் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறைக்குள் அடைபடுகிறார். இரண்டாவது மகன் கார்த்திக் பிளம்பிங் வேலை செய்கிறார். ரவுடி அண்ணன் மீது அவருக்கு வெறுப்பு. லிங்காவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர போராடும் தாய் ஜானகி சுரேஷ் திடீரென இறந்து போகிறார். அம்மாவுக்கு இறுதி சடங்கு செய்ய நிர்ப்பந்தத்தின் பேரில் லிங்காவை பரோலில் எடுக்க கார்த்திக் முயற்சிக்கிறார். அப்போது சில பிரச்சினைகள் வருகிறது. லிங்கா பரோலில் வந்தாரா, அவர் குரூர கொலைகாரனாக மாற காரணம் என்ன என்பது மீதி கதை.

லிங்கா சிறுவயதிலேயே சீர்திருத்த பள்ளிவாசம், கோபம், கொலை, காதல் முறிவு, தம்பியுடன் மோதல் என்று கரடு முரடான கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். சண்டை காட்சிகளில் வேகம். தம்பியாக வரும் ஆர்.எஸ்.கார்த்திக் தன்னை விட அண்ணன் மீது அம்மா அதிக பாசம் வைப்பதை பார்த்து பொறாமைப்படும் கதாபாத்திரம், அதை சிறப்பாக செய்துள்ளார். அண்ணன் மீதான கோபத்திலும், அவரைப் பரோலில் எடுக்க வகுக்கும் வியூகங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். காதலிகளாக வரும் கல்பிக்கா, மோனிஷா முரளி குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஜானகி சுரேஷ் பாசமான தாயாக வருகிறார். வக்கீலாக வரும் வினோதினி கதைக்கு வலுசேர்த்து தனி கவனம் பெறுகிறார், சில காட்சிகளில் இருக்கும் குழப்பம், தேவையற்ற ஆபாச வசனங்களை தவிர்த்து இருக்கலாம். புதிய கதைக்களம், வித்தியாசமான திரைக்கதையில் காட்சிகளை திருப்பங்களுடன் விறுவிறுப்பாக படமாக்கி கவனம் பெறுகிறார் இயக்குனர் துவாரக் ராஜா. அண்ணன் தம்பி மோதலை வித்தியாசமான கோணத்தில் படமாக்கிய விதம் சிறப்பு, ராஜ்குமார் அமல் பின்னணி இசையும், மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவும் காட்சிகளோடு ஒன்ற வைக்கின்றன.


Next Story