தமிழ்க்குடிமகன்: சினிமா விமர்சனம்


தமிழ்க்குடிமகன்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: சேரன் நடிகை: ஸ்ரீ பிரியங்கா  டைரக்ஷன்: இசக்கி கார்வண்ணன் இசை: சாம் சி.எஸ் ஒளிப்பதிவு : ராஜேஷ் யாதவ்

கிராமத்தில் வசிக்கும் சேரன், ஈமச்சடங்கு செய்வது, சலவை தொழில் செய்வது என தங்கள் சமூகம் ஆண்டாண்டு காலமாக செய்து வரும் தொழில்களில் இருந்து விடுதலை பெறுவதற்காக அரசாங்க வேலைக்கு செல்ல முயற்சி செய்கிறார்.

அவருடைய அந்த முயற்சியை ஆதிக்க வகுப்பைச் சேர்ந்தவர்கள் சூழ்ச்சி செய்து தடுக்கிறார்கள்.

இந்த நிலையில் சேரன் மீண்டும் தங்கள் குல தொழிலுக்கு திரும்பாமல் பால் வியாபாரம் செய்து கவுரவமாக பிழைப்பு நடத்துகிறார்.

அந்த சமயத்தில் ஊர் பெரியவர் மரணம் அடைகிறார். இறந்தவரின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு சேரனை அழைக்க அவர் மறுக்கிறார். இதனால் சேரன் சந்திக்கும் பிரச்சினை என்ன? என்பது மீதி கதை.

நாயகனாக நடித்துள்ள சேரனுக்கு பரிதாபத்தையும், அவமானத்தையும் சுமக்கும் கனமான வேடம்.

தன்னுடைய அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் மனநிலை எப்படியெல்லாம் புழுவாக துடிக்கும் என்பதை தன்னுடைய உணர்வுப்பூர்வமான நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கும் விதம் அருமை.

உயர் வகுப்பை சேர்ந்த லால், வேலராமமூர்த்தி ஆகியோரின் தோற்றம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர், சுரேஷ் காமாட்சி, ஸ்ரீ பிரியங்கா, அருள் தாஸ், ரவி மரியா, மயில்சாமி, துருவா, மு.ராமசாமி என அனைவரும் தங்கள் வேலையை கூட்டாமல், குறைக்காமல் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் கதை மாந்தர்களையும், கதைக் களத்தையும் மிக அழகாக படம் பிடித்து கண்களுக்கு இதம் அளிக்கிறார்.

சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு பெரிதும் உதவி செய்திருக்கிறது. கதையோடு கலந்த பாடலாக இருந்தாலும் மீண்டும் கேட்கும் வகையில் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.

சில காட்சிகளில் நாடகத்தனம் தெரிவது பலகீனம்.

குலத்தொழில் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவமானங்களையும், மன வேதனையும் மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

தொழிலை வைத்து ஒருவரை தரம் பிரித்து இழிவுபடுத்தும் சமூகப்பார்வை மாற வேண்டும் என்பதை உணர்வுப் பூர்வமாக சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.

1 More update

Next Story