தண்டட்டி: சினிமா விமர்சனம்


தண்டட்டி: சினிமா விமர்சனம்
x
நடிகர்: பசுபதி நடிகை: ரோகிணி, அம்மு அபிராமி  டைரக்ஷன்: ராம் சங்கையா இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு : மகேஷ் முத்துசுவாமி

தண்டட்டியின் வழியே கிராமத்து உறவுகளையும் சுயநல மனங்களையும் சமரசமற்ற யதார்த்தத்தோடு நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.

பசுபதி

தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி கிராமத்தில் கதை நடக்கிறது. அங்கு வசிக்கும் ரோகிணி வயது மூப்பு காரணமாக மரணமடைகிறார். இறந்த ரோகிணியின் காதில் உள்ள தண்டட்டியை கைப்பற்ற அவருடைய மகன்களும், மகள்களும் திட்டமிடுகிறார்கள். ஆனால் அந்த தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. இதனால் சாவு வீட்டிலும், குடும்பத்திலும் குழப்பமும், பிரச்சினையும் உருவாகிறது. போலீஸ் ஏட்டு பசுபதி மாயமான தண்டட்டி குறித்து விசாரணை நடத்துகிறார். அவரால் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிந்ததா? அவருக்கு என்ன சிக்கல்கள் வருகின்றன? என்பது மீதி கதை.

பசுபதிக்கு மொத்தப் படத்தையும் தோளில் சுமக்கும் கனமான வேடம். அதை பிரமாதமாக செய்திருக்கிறார். பிரச்சினைக்குள் தேவையில்லாமல் நுழைந்து பிறகு அதற்கு தீர்வு காணவும் முடியாமல் அதிலிருந்து மீளவும் முடியாமல் தவிக்கும் அவரது வெகுளித்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.

ரோகிணிக்கு அதிகம் சவமாக நடிக்கும் வேடம். கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உள்ளார். விவேக் பிரசன்னா குடிகாரனாக ரகளை செய்கிறார்.

அம்மு அபிராமி நடிப்பில் தனி முத்திரை பதித்திருக்கிறார். ரோகிணியின் மகள்களாக வரும் தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, ஜானகி ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி வெகு சுலபமாக நம்மை கதைக்களமான தேனிக்கு அழைத்து செல்வதில் வெற்றி பெறுகிறார்.

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி பாடல்களில் கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் பின்னணி இசையில் ஜொலிக்கிறார்.

அறம் மறந்து சுயநலம் அதிகமாகிவிட்ட இக்கால மனிதர்களின் மன நிலையை மையமாக வைத்து நேர்மையுடன் நேர்த்தியான படம் கொடுத்திருக்கும் ராம் சங்கையா திறமையான டைரக்டராக உயர்ந்து நிற்கிறார். கிராமத்தில் துக்க வீட்டில் நடக்கும் சர்ச்சைகளை சுவாரஸ்யமாக படமாக்கிய விதம் அருமை. கிளைமாக்ஸ் நெருடலாக இருந்தாலும் படத்தின் யதார்த்தம் அதை மறக்கச் செய்துவிடுகிறது.

1 More update

Next Story