துடிக்கும் கரங்கள் - சினிமா விமர்சனம்


துடிக்கும் கரங்கள் - சினிமா விமர்சனம்
x
நடிகர்: விமல்,சவுந்தரராஜா நடிகை: சுபிக்‌ஷா, மிஷாநரங்  டைரக்ஷன்: வேலுதாஸ் இசை: ராகவ் பிரசாத் ஒளிப்பதிவு : ராம்மி

யூடியூப் சேனல் நடத்தும் விமல் அதன் மூலம் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறார். ஐ.ஏ.எஸ் படிக்க வரும் சங்கிலி முருகன் மகன் ஆனந்த் நாக் காணாமல் போன வீடியோவையும் வெளியிடுகிறார். இன்னொரு புறம் போலீஸ் உயர் அதிகாரி சுரேஷ் மேனன் மகள் காரில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இந்த வழக்கை போலீஸ் அதிகாரி சவுந்தரராஜா விசாரிக்கிறார். கொலையில் அனந்த் நாக்குக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. ஆனந்த் நாக் காணாமல் போனது எப்படி? இதன் பின்னணியில் ஒளிந்துள்ள மர்மம் என்ன என்பதற்கு விடையாக மீதி கதை...

சமூக பொறுப்புள்ள யூடியூபர் கதாபாத்திரத்தில் விமல் கச்சிதமாக பொருந்துகிறார். அதிரடி சண்டையிலும் இறங்கி அடித்துள்ளார். மிஷாநரங் ஆரம்பத்தில் விமலை வெறுப்பது பின்னர் அவருடன் காதலில் விழுவது என்று வழக்கமான கதாநாயகிக்கான வேலையை செய்துள்ளார்.

இன்னொரு நாயகியான சுபிக்ஷா தந்தைக்கு எதிராகவே திரும்பும் நேர்மையான கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துவதுடன் எதிர்பாராத முடிவை எடுத்து அதிர்ச்சியும் தருகிறார்.

ஆனந்த் நாக் மோசடி ஒன்றை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட நினைத்து எடுக்கும் முயற்சியில் அவருக்கு என்ன ஆகுமோ என்கிற படபடப்பை தனது நடிப்பால் கடத்துகிறார்.

சுரேஷ் மேனன் உயர் போலீஸ் அதிகாரியாக வந்து போகிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் சவுந்தரராஜா ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சங்கிலி முருகன் வழக்கம் போல குணச்சித்திர நடிப்பால் கவர்கிறார். சதீஷ் காமெடி ஏரியாவை கலகலப்பாக வைத்துள்ளார். பில்லி முரளி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

சில காட்சிகள் இலக்கு இல்லாமல் நகர்வது பலகீனம்.

ராகவ் பிரசாத் பின்னணி இசையில் படத்தை தாங்கிப்பிடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்மி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்

போதைப்பொருள் கதையை அதிரடி சண்டை, திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் வேலுதாஸ்.

1 More update

Next Story