வரலாறு முக்கியம்: சினிமா விமர்சனம்


வரலாறு முக்கியம்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: ஜீவா நடிகை: காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நக்ரா  டைரக்ஷன்: சந்தோஷ் ராஜன் இசை: ஷான் ரகுமான் ஒளிப்பதிவு : சக்தி சரவணன்

பெண்ணைக் காதலிக்க வைக்கும் ஓர் இளைஞனின் போராட்டமே வரலாறு முக்கியம் படத்தின் கதை.

கோயம்புத்தூரில் யுடியூப் சேனல் நடத்தும் ஜீவா நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார். இவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் பள்ளி ஆசிரியர். தாய் சரண்யா. இவர்கள் இருவருக்கும் ஜீவா பொறுப்பு இல்லாமல் திரிவதாக கவலை.

இந்த நிலையில் ஜீவாவின் பக்கத்து வீட்டில் ஒரு மலையாளி குடும்பம் குடித்தனம் வருகிறது. அதில் காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நக்ரா என்ற அக்காள், தங்கைகள் இருக்கிறார்கள். தங்கைக்கு ஜீவா மேல் காதல் வருகிறது. ஆனால் ஜீவாவோ காஷ்மீராவை விரும்புகிறார்.

முதலில் ஜீவாவை வெறுக்கும் காஷ்மீரா பிறகு காதலை ஏற்கிறார். ஒரு நாள் காஷ்மீரா பெற்றோர் வெளியூர் செல்கிறார்கள். அப்போது தனியாக இருக்கும் காஷ்மீராவை சந்திக்க அவரது வீட்டுக்கு செல்கிறார் ஜீவா. அங்கு நடக்கும் ஒரு காரியத்தால் ஜீவா மீது வெறுப்பாகி காதலை முறித்து விட்டு விலகுகிறார் காஷ்மீரா.

அவரது தந்தையும் துபாய் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார். ஜீவா காதல் என்ன ஆனது என்பது மீதி கதை.

ஜீவா கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். தனக்கு காதல், நக்கல் நய்யாண்டி, காமெடி அபாரமாக செய்ய வரும் என்பதை இந்த படத்தில் மீண்டும் நிரூபித்து இருக்கிறார். தன்னை வெறுக்கும் காஷ்மீரா பின்னால் காதலோடு அலைவது, அவரது தங்கை காதலை நைசாக முறிப்பது சுவாரஸ்யம்.

காஷ்மீரா கோபம், காதல் உணர்வுகளை அழகான விழிகளால் வெளிப்படுத்தி வசீகரிக்கிறார். அவரது தங்கையாக வரும் பிரக்யா நக்ரா துறுதுறுவென களையாக இருக்கிறார்.

ஜீவாவின் தந்தையாக வரும் கே.எஸ்.ரவிக்குமார். அம்மா சரண்யா, தாத்தா ராமதாஸ், சித்திக் ஆகியோரும் கதையோடு வந்து அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

ஜீவாவின் நண்பராக வரும் வி.டி.வி கணேஷ் படம் முழுவதும் வசனத்தால் கலகலப்பூட்டுகிறார். ஷான் ரகுமான் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த மாதிரி திரைக்கதையிலும் கொஞ்சம் அழுத்தம் சேர்த்து இருக்கலாம்.

காதல் கதையை காமெடியும், கலகலப்புமாக ஜாலியாக நகர்த்தி சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன்.


Next Story