கவர்ச்சி அழகி ஜாக்குலினும் சல்மான்கானும்..


கவர்ச்சி அழகி ஜாக்குலினும் சல்மான்கானும்..
x
தினத்தந்தி 5 Feb 2017 3:59 PM IST (Updated: 5 Feb 2017 3:58 PM IST)
t-max-icont-min-icon

இந்தி திரை உலகில் பல ஆண்டுகளாக கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர், ஜாக்குலின் பெர்ணான்டஸ்

ந்தி திரை உலகில் பல ஆண்டுகளாக கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர், ஜாக்குலின் பெர்ணான்டஸ். இவர் பிரபல நடிகர் சல்மான்கானுடன் அதிக நெருக்கம் கொண்டவர். அவரிடம் இருந்து ஏராளமான நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டதாக வெளிப்படையாக, எல்லா இடங்களிலும் சொல்லிக் கொண்டிருப்பவர்.

ஜாக்குலினிடம் சில கேள்விகள்:

உங்களது இத்தனை ஆண்டுகால திரை உலக அனுபவத்தை வைத்து, ரசிகர்கள் எத்தகைய படத்தை வெற்றியடைய செய்வார்கள் என்று உங்களால் கணித்துவிட முடியுமா?

“எவ்வளவு அனுபவம் வாய்ந்தவராலும் அதை கணிக்க முடியாது. காலத்திற்கேற்ப ரசனைகள் மாறும். என்னையே எடுத்துக்கொண்டால் எனக்கு ஒரு காலத்தில் காமெடி படங்கள்தான் அதிகம் பிடிக்கும். பின்பு பிரமாண்ட படங்களை விரும்பினேன். அடுத்து விஞ்ஞானத்தை அடிப் படையாக கொண்ட சினிமாக்களை ரசித்தேன். இப்படி என் ரசனையே மாறிக்கொண்டே செல்கிறது. யாரும் எப்போதும் ஒரே மாதிரியான விஷயங்களை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். ரசிகர்களை கணித்து படமெடுப்பதெல்லாம் நடக்காத காரியம்”

நீங்கள் கவர்ச்சி மற்றும் உடல் தோற்றத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறவர். அதற்கு எதிர்மாறான கதை அமைந்தால் நடிப்பீர்களா?


“படத்தின் டைரக்டரை பொறுத்து என் முடிவில் மாற்றம் ஏற்படலாம். என்னை பொறுத்தவரையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது ஒரு சவாலான விஷயம். அந்த சவாலை நான் உடைக்க வேண்டுமானால் அதற்கு ஏதாவது வலிமையான காரண மிருக்கவேண்டும். லாபகரமான விஷயமாவது இருக்கவேண்டும். அப்படி எந்த பலனும் இல்லாமல் என்னை நானே ஆபத்துக்குள் சிக்கவைத்துக்கொள்ளமாட்டேன்”

இந்தி திரை உலகில் பிரபல நடிகர்களின் ஆதிக்கம் உள்ளதா? அதனால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா?

“பிரபலங்களின் ஆதிக்கம் எல்லா திரை உலகிலும் இருக்கும். அவர்கள் தங்களுடைய அனுபவ அறிவை புதியவர்களோடு பகிர்ந்து கொள்ள முற்படும்போது சில முரண்பாடுகள் தோன்றும். தான் நடிக்கும் படம் மிகச்சிறப்பாக அமையவேண்டும் என்ற ஆதங்கமும் அவர்களிடம் காணப்படும். அதற்காக மற்றவர் களுக்கு வழிகாட்ட முற்படும்போது அது அசவுகரியமாகவும் அமைந்துவிடும். ஆரம்பகாலத்தில் எனக்கும் சில பாதிப்புகள் இருந் தன. தங்களுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி சில நேரம் தவறாக முடிந்து விடுவதுண்டு. புது முகங்களைப் பொறுத்தவரை தன் திறமையை நிரூபிக்க மட்டுமே முயற்சி செய்வார்கள். என்னைப் பொறுத்தவரை என் மரியாதைக்கு எந்த குறையும் வராமல் பார்த்துக்கொள்வேன்”

திரை உலகில் உங்களை கஷ்டப்படுத்திய விஷயம்?

“எந்த நேரம் யார் நம்மைப் பற்றி தவறாக பேசுவார்கள் என்பது தெரியாது. நம் வளர்ச்சி சுற்றி இருப்பவர்களில் யார் மனதை அதிகம் உறுத்துகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியாது. யார் யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதும் மிகவும் கவனிக்கத்தகுந்த விஷயம்”

சல்மான்கானை அடிக்கடி புகழ்கிறீர்களே, அவர் உங்களுக்கு கொடுத்த ஆலோசனைகள் என்ன?


“ஆரம்பத்தில் நான் எப்படியாவது என் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதிலே குறியாக இருந்தேன். வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. ஒருகட்டத்தில், ‘சுயமரியாதையைவிட்டுக் கொடுத்துவிடாதே’ என்று சல்மான்கான் என்னிடம் சொன்னார். ‘உன் திறமையை மற்றவர் குறைத்து மதிப்பிட அனுமதிக்காதே. உனக்கு அசவுகரியமான விஷயத்தை யாருக்காகவும் பொறுத்துக்கொள்ளாதே. மற்றவர்கள் மனதை கஷ்டப்படுத்தக் கூடாது என்பது நல்ல நோக்கம்தான். அதே நேரத்தில் யாரும், எந்த நேரத்திலும் உன்னையும் கஷ்டப்படுத்த அனுமதித்து விடாதே’ என்றெல்லாம் எனக்கு தைரியம் கொடுத்தார். அதனால் இப்போது நான் இயல்பு நிலைக்கு வந்துவிட்டேன்”

உங்களுக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்களாமே, அப்படியா?

“ஒரு படத்தில் நடிக்கும்போது அதில் நடிப்பவர்கள் எல்லாம் நண்பர்களாக இருப்பார்கள். படம் நன்றாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லோரும் நட்போடு பழகுவார்கள். ஷூட்டிங் முடிந்ததும் அந்த நட்பும் முடிந்துவிடும். இங்கே எல்லோருக்கும் வேலை அதிகம். நட்பு பாராட்டும் அளவுக்கு நேரம் இருப்பதில்லை. எப்போதாவது விருது வழங்கும் விழாவில் பார்த்து பேசிக்கொள்வதோடு சரி. எனக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், எனக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது என்று அர்த்தம்”

நடிகைகளுக்குள் போட்டி இருக்கலாமா?


“இருக்கலாம். ஆனால் அதுவே எல்லை கடந்து போய் பொறாமையில் முடிந்துவிடக்கூடாது. எல்லோரையும் நல்ல நண்பர்களாக நினைத்துவிட்டால் மற்றவர்கள் உயர்வு நம் கண்ணை உறுத்தாது. எல்லோரும் வேலை செய்யத்தான் வந்திருக்கிறோம். அவரவர் வழியில் அவரவர் முன்னேறட்டும். நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. அதனால் நிம்மதியாக இருக்கிறேன்”

குறிப்பிட்டு சொல்லும்படியாக உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் யார்?

“என்னோடு அதிக படங்களில் பணியாற்றியவர்களைதான் நெருக்கமான நண்பர்கள் என்று சொல்ல முடியும். அப்படிப் பார்த்தால் சஜீத் நாடியாத்வாலாவுடன் நான் அதிக படங்களில் நடித் திருக்கிறேன். அதிக படங்களில் நடிக்கும் இருவருக்குள் அதிக நம்பிக்கை ஏற்படும். அதுதான் நட்பு. சோனம் கபூர் என் பள்ளித்தோழி. இன்றுவரை என் தோழியாகவே இருக்கிறார். சல்மான்கான் எனக்கு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்”

ஊடகங்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் நட்பு?

“நான் இலங்கையிலிருந்து வந்தவள். இதழியல் கல்வியை கற்றவள். ஊடகத்தில் பணியாற்றவே ஆசைப்பட்டேன். ஆனால் சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஊடகங்கள் பற்றி தெரியும் என்பதால் அவர்களுடன் அதிக நட்புடன் பழகுகிறேன். அவர்கள் எழுப்பும் பல கேள்விகள் என்னை கோபப்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் எதற்காக அந்த கேள்விகளை கேட்கிறார்கள் என்பதை புரிந்துகொண்ட பின்பு கோபத்தை மறந்து சாந்தமாகிவிடுவேன்” 

Next Story