ஹர்பஜன் சிங் மனைவியின் குத்தாட்டம்


ஹர்பஜன் சிங் மனைவியின் குத்தாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2017 1:03 PM IST (Updated: 19 Feb 2017 1:03 PM IST)
t-max-icont-min-icon

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். அவரது மனைவி கீதா பஸ்ரா. இவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். அவரது மனைவி கீதா பஸ்ரா. இவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை, சிறுவயதிலேயே இவருக்கு இருந்திருக்கிறது. ஆனால் இவருக்கு வழிகாட்டவோ, இவரை அறிமுகம் செய்யவோ யாரும் முன்வராததால், நடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் துணிச்சலோடு மும்பை வந்து இறங்கிவிட்டார். போராடி திரை உலகில் கால்பதிக்கவும் செய்துவிட்டார். பின்பு ஹர்பஜன் சிங்கை காதலித்து மணந்தார்.

திருமணத்திற்கு பின்பும் நடித்துக் கொண்டிருக்கும் கீதா பஸ்ரா, சினிமா ஒன்றில் ஆடிய குத்தாட்டம் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அது பற்றி அவரிடம் பேசுவோம்:

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மனைவியான நீங்கள் எப்படி இதுபோன்ற அதிரடியான கவர்ச்சிக் குத்தாட்டத்திற்கு சம்மதித்தீர்கள்?


சினிமாவில் இடம்பெறும் எல்லாமும் கலைதான். அந்த ஆட்டம் தவறு, இந்த நடிப்பு தவறு என்று கணிக்க ஆரம்பித்துவிட்டால், சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய் விடும். ஒரு சினிமாவை நடனமே அழகாகவும், கவர்ச்சியாகவும் ஆக்குகிறது. அதனால்தான் நடனமும், பாட்டும் சினிமாக்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. நான் போட்ட குத்தாட்டத்தில் எந்த தவறும் இருப்பதாக கருதவில்லை. பழைய கவர்ச்சி நடிகை ஹெலன் ஆடிய நடனங்களின் பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது. பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மேடையில் ஹெலன் நடனப் பாடலைத்தான் முதலில் பாடுவார். அந்த அளவுக்கு அந்த ஆட்டத்தோடு ரசிகர்கள் ஒன்றிப்போயிருக்கிறார்கள்.

கதையின் சுவாரசியத்திற்காக நடனக்காட்சிகள் இணைக்கப்படுகின்றன. நான் ஆடிய நடனத்தில் எந்த ஆபாசமும் இல்லை. என் திருமண வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். அந்த படத்தை வெற்றியடையச் செய்வதற்காக குத்தாட்டம் சேர்க்கப்பட்டது. வெற்றிக்கு காரணமான அதனை தரம்தாழ்த்தி பேசுவது சரியல்ல.

உங்கள் திரை உலக பிரவேசம் மிக கடினமாக அமைய என்ன காரணம்?

எதுவும் சுலபமாக அமைந்துவிடாது. நாம் காலடி எடுத்துவைத்த பின்புதான், அந்த துறையில் இருக்கும் கஷ்டங்கள் தெரியும். நம்மிடம் ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதை வென்றுகாட்ட தேவையான திறமையும் இருக்கவேண்டும். அதனால் முதலில் கிஷோர் நமித் கபூரிடம் நடிப்பு கற்றுக்கொண்டேன். பிறகு இம்ரான் ஹாஷ்மி நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ‘தில் தியா’ படத்தில் கதாநாயகி ஆக்கப்பட்டேன். தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் பஞ்சாபி மொழி படம் ஒன்றில் நடித்தீர்களே. அதற்கு உங்கள் கணவர் காரணமா?

நான் பஞ்சாபி பெண். அதனால் என் மொழிப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அதை பார்த்து என் உறவினர்கள் சந்தோ‌ஷப்படுவார்கள். என் ஆசையை கணவரும் உணர்ந்துகொண்டு என்னை உற்சாகப்படுத்தினார்.   ஆனால் நான் மொழியைவிட, நடிக்கும் கதாபாத்திரம்தான் முக்கியம் என்று கருதுகிறேன். நான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்ததால், இந்திய மொழிகள் எல்லாமுமே எனக்கு தடுமாற்றமாக இருக்கிறது.

இந்தி திரை உலகில் நட்சத்திர வாரிசுகளுக்குத்தான் வாய்ப்பில் முன்னுரிமை தருவதாக சொல்லப்படுகிறதே?

நட்சத்திர வாரிசுகள் எத்தனைபேர் வந்தாலும் புதுமுகங்களுக்கு தனி மரியாதை இங்கு கிடைக்கிறது. என்னதான் சிபாரிசு இருந்தாலும், தனித்    திறமைக்கு எப்போதும் மதிப்பு இருந்துகொண்டுதானிருக்கும். ஷாருக்கான் யாருடைய வாரிசும் இல்லை. ஆனாலும் பெரும்புகழ் பெற்றுவிட்டாரே! நாம் பேசுவதைவிட நமது திறமைகள் பேசப்படுவதே சிறந்தது.

எந்த அடிப்படையில் உங்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கின்றன?

திறமை அடிப்படையில்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன. தயாரிப்பாளர் பணத்தைப் போட்டு படம் எடுக்கும்போது சிபாரிசுக்கு ஓரளவுதான் முன்னுரிமை கொடுப்பார். திறமைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை.

உங்கள் நடிப்புக்கு, கணவர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்?

என் குடும்பத்தில் இருந்தும், என் கணவர் குடும்பத்தில் இருந்தும் எனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கிறது. அவர்கள் அனைவரும் உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் என்னால் எதையும் சாதிக்க முடியாது. எனது வளர்ச்சிக்கு அவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

லண்டனில் பிறந்த நீங்கள் ஆலிவுட் படங்களில் நடிக்க ஏன் முயற்சிக்கவில்லை?

லண்டனில் பிறந்தாலும் நான் இந்தியப் பெண். என் மனம் முழுவதும் இந்தியாவிலேயே இருந்தது.

இந்தி திரை உலகில் நீங்கள் தெரிந்துகொண்டது?

இங்கு முன்னுக்கு வர பொறுமை அவசியம். ஒரே மாதிரியான நடிப்பை யாரும் ஏற்பதில்லை. அதனால் நமக்கென்று ஒரு தனி பாணியை அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இங்கு போட்டிகள் அதிகம். அதனால் திறமையை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். மனதில் நிலைத்து நிற்கும் நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கவேண்டும்.

உங்கள் கணவர் நீங்கள் நடிப்பதை விரும்புகிறாரா?

இதையே தான் நான் அவரிடம் கேட்டேன். நான் ஒரு நடிகையாக இருந்தபோது தான் என்னை திருமணம் செய்துகொண்டார். நான் நடிக்க விரும்புகிறேன் என்பதும், அதற்காகவே நான் இந்தியா வந்திருக்கிறேன் என்பதும் அவருக்கு தெரியும். என் விருப்பத்திற்கு மாறாக அவர் எதையும் செய்யமாட்டார். அவர் பரந்த மனம் கொண்ட நல்ல கணவர்.


Next Story