இலியானா சொல்லும் புதுமுக ரகசியம்


இலியானா சொல்லும் புதுமுக ரகசியம்
x
தினத்தந்தி 2 April 2017 3:23 PM IST (Updated: 2 April 2017 3:23 PM IST)
t-max-icont-min-icon

‘பர்பி’ படத்தில் நடித்து, இந்தி திரை உலகில் புகழ் பெற்றவர் இலியானா.

‘பர்பி’ படத்தில் நடித்து, இந்தி திரை உலகில் புகழ் பெற்றவர் இலியானா. இளமையும், கவர்ச்சியும் நிறைந்த இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.

அவரிடம் சில கேள்விகள்:

முதல் படம் வெற்றியடைந்ததும், அடுத்த படத்திலே சம்பளத்தை உயர்த்தி விடுவது சரியா?


முதல் படத்தின் வெற்றி, அடுத்த படம் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு மாறாக அதை சம்பளத்தை உயர்த்திக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நம் திறமைமீது மற்றவர்களுக்கு நம்பிக்கை வரும்போது நம் அந்தஸ்து தானே உயரும். படம் வெற்றியடைந்ததும் சம்பளத்தை உயர்த்திக்கொண்டால், அடுத்த படம் தோல்வியடைந்ததும் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும் அல்லவா! நம் உழைப்பு, அனுபவம், திறமை இதை வைத்து தான் சம்பளத்தை உயர்த்த முடியும். ஆரம்ப காலத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ளத்தான் பாடுபடவேண்டும்.

அக்‌ஷய்குமாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளம் இல்லாமல் நடிப்பேன் என்று நீங்கள் சொன்னது ஏன்?

அக்‌ஷய்யுடன் நடிக்கும் விருப்பத்தை அப்படி தெரிவித்தேன். அவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ. அவருடன் நடிப்பது ஒரு தனி அனுபவம். நான் சம்பளத்தை முன்னிலைப்படுத்தி நடிக்கும் கதாநாயகி அல்ல என்பதற்காக அப்படி தெரிவித்தேன்.

சம்பளத்தை குறைத்துக்கொண்டால் நம் திறமையை குறைவாக எடைபோட்டு விடுவார்கள் என்று சில நடிகைகள் கூறுகிறார்களே?

அது தவறு. நம் திறமையை எடைபோடுபவர்கள் ரசிகர்கள். அவர்கள்தான் நம் திறமையை மதிப்பிடவேண்டும். அதற்கும் நாம் வாங்கும் சம்பளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படத்தில் நடிக்கும்போதே அது வெற்றிப் படமா? தோல்விப் படமா? என்று கண்டறிந்து விடுவீர்களா?


எல்லா படங்களும் வெற்றிக்காகத்தான் தயாரிக்கப்படுகின்றன. அது எந்த இடத்தில் தடம் மாறும் என்றே தெரிவதில்லை. மிகச்சிறந்த படம்கூட சில சமயம் தோல்வியடைந்துவிடும். காரணமே தெரியாது. அன்றிலிருந்து இன்று வரை அது மட்டும்தான் புரியாத ரகசியமாக இருக்கிறது.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனியின் வாழ்க்கைக் கதை சினிமாவில் நீங்கள் நடிக்க மறுத்து விட்டது ஏன்?

எனக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது. டோனி பற்றியும் எதுவும் தெரியாது. எனக்கு தெரியாத வி‌ஷயத்தைப் பற்றி நான் அதிகம் சிந்திக்க முடியாது. அதில் என்னால் எதையும் சாதிக்கவும் முடியாது. வேறு எந்த படமாக இருந்தாலும் எனது கற்பனையையும், திறமையையும் காட்டி நடித்து  விடலாம். நிஜ கதைகளில் அப்படி நடிக்க முடியாது. அதனால் ரிஸ்க் எடுக்கவேண்டாமே என்று மறுத்துவிட்டேன். நான் எடுத்த அந்த முடிவு சரியானதுதான்.

நீங்கள் ஒரு சினிமாவில் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுகொண்டே  இருந்தீர்களாமே ஏன்?

ஒரு படத்தில் நமது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் நமக்கு பாராட்டு கிடைப்பது உறுதி. அதுதான் ருஸ்தம் படத்தில் கிடைத்தது.  அந்த படத்தில் இடம்பெறும் காட்சிக்காக நான் அழவேண்டியதிருந்தது. ஆனால் நான் எவ்வளவோ முயற்சித்தும் அழுகை வரவில்லை. நான் நன்றாக அழ நடிகர் டீனு எனக்கு உதவி செய்தார். அழுது அழுது காட்சிகளை முழுமையாக நடித்துக் கொடுத்தேன். காட்சி முடிந்தும் பல மணி நேரம் அழுது கொண்டிருந்தேன். அழுகையை கட்டுப்படுத்த முடியாத உணர்வுபூர்வமான காட்சியாக அது அமைந்துவிட்டது.

அக்‌ஷய்குமாருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

அக்‌ஷய் நடிப்பிற்காகவே பிறந்தவர். எந்த கதாபாத்திரத்தை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நடிப்பைப் பற்றி பல வி‌ஷயங்களை அவர் மற்ற வர்களுக்கும் சொல்லித்தருவார். அது அவருடைய சிறப்பு. படத்தில் தான்மட்டும் நன்றாக நடித்தால் போதாது, மற்றவர் களும் நடிக்கவேண்டும் என்ற அக்கறை அவருக்கு உண்டு. அதனால் இயக்குநர்களும் அவரை மிகவும் விரும்புவார்கள்.

‘பர்பி’ சினிமா பிரமாண்டமான தயாரிப்பாக அமைந்திருந்தது. அதுபோன்ற சினிமாக்களிலே தொடர்ந்து நடிக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

அப்படி நான் எந்த பிரமாண்டத்தையும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய படம் வெற்றியடைந்தால் நான் மிகுந்த உற்சாகம்கொள்வேன். அப்போது என் மீதே எனக்கு அதிக நம்பிக்கை உருவாகும். அது அடுத்த படத்தை சிறப்பாக செய்யயும் உற்சாகத்தைக் கொடுக்கும். இதுதான் எல்லா நடிகைகளின் கனவாக இருக்கும். எல்லா படங்களிலும் அப்படி ஒரு கனவோடுதான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். வெற்றியடைந்தால் கனவு பலித்தது என்று கொண்டாடலாம். இல்லை என்றால் கனவு என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமலே விட்டுவிடலாம்.

புதுமுக நடிகைகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்களே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


படத்துக்கு படம் புதுப்புது நடிகைகளை ரசிகர்களுக்கு காட்ட டைரக்டர்கள் விரும்புகிறார்கள். அது தவிர புதுமுகங்களின் சம்பளமும் குறைவு. புதுமுகங்களை இயக்குநர் விருப்பப்படி இயக்கலாம். இதில் கவனிக்கத்தக்க இன்னொரு வி‌ஷயம், நடிகைகள்தான் அறிமுகமாகிக்கொண்டே இருப்பார்கள். கதாநாயகர்களை மாற்ற மாட்டார்கள். இதுவும் நல்லதுதான். நிறைய நடிகைகள் திரை உலகத்திற்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.


Next Story