பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை -நடிகை ஹன்சிகா


பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை -நடிகை ஹன்சிகா
x
தினத்தந்தி 15 Aug 2017 2:35 PM IST (Updated: 15 Aug 2017 2:35 PM IST)
t-max-icont-min-icon

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார், ஹன்சிகா. இந்தி படங்களிலும் தலை காட்டி இருக்கிறார். சிரிப்பால் வசீகரிப்பவர்.

 சின்ன குஷ்பு என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தவர். ஹன்சிகாவை சந்தித்தபோது சினிமா அனுபவங்கள், சமூக சேவை பணிகள், சுதந்திர சிந்தனைகள் பற்றியெல்லாம் மனம் திறந்து பேசினார்.
“நான் சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டேன். அதனால் மற்ற நடிகைகளை விட, சினிமாவில் எனக்கு அனுபவம் அதிகம் இருக்கிறது. கதைகளை தேர்வு செய்யும் பக்குவமும் இருக்கிறது. கதை, கதாபாத்திரங்கள் தேர்வில் ரொம்ப மெனக்கெடுகிறேன். தற்போது ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

சென்னை, ஐதராபாத், வெளிநாடுகள் என்று படப்பிடிப்புகளுக்காக விமானத்தில் பறந்து கொண்டு இருக்கிறேன். ஓய்வு என்பதே இல்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கைநிறைய படங்கள் இருக்கின்றன. கடினமாக உழைக்கிறேன். நடிகையானதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமைவது இல்லை. பணமும் புகழும் இந்த தொழிலில்தான் கிடைக்கிறது.

நடிகையாக இருப்பதில் மன நிறைவு கிடைக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் நடிகர்-நடிகைகள் இல்லை. அவர்களால்தான் வளர்கிறோம். அதனால் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முக்கியம். அவர்களின் கைதட்டல்கள்தான் எனக்கு உற்சாகம் அளிக்கிறது. இன்னும் உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுக்கிறது.

தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். ஒவ்வொருவருடன் நடித்த அனுபவமும் எனக்கு மறக்க முடியாத இனிமையான அனுபவம். எல்லா படங்களுமே வரவேற்பை பெற்றன. சினிமாவில் ஆணாதிக்கம் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. ஒவ்வொரு படத்துக்கும் கதாநாயகர்கள் முக்கியமானவர்கள்தான். அதுபோல் கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.

நான் ஆரம்பத்தில் காதல் படங் களில் அதிகமாக நடித்தேன். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் சவாலான வேடங்களை எதிர்பார்க் கிறேன். ‘அரண்மனை’ படத்தில் பேயாக நடித்த அனுபவம் மறக்க முடியாதது.
மலையாளத்தில் முதல் தடவையாக மோகன்லாலுடன், ‘வில்லன்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் நான் வில்லியாக நடிப்பதாக ஒரு தகவல் பரவியிருக்கிறது. அந்த படத்தில் என் கதாபாத்திரம் முழுவதும் வில்லத்தனமாக இருக்காது. இந்த படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். எல்லா நடிகைகளுக்குமே ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோன்ற கதாபாத்திரம்தான் இந்த படத்தில் எனக்கு அமைந்து இருக்கிறது.

சமூக சேவைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். எனது அம்மாவிடம் இருந்துதான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பழக்கம் எனக்கு ஏற்பட்டது. சிறு வயதில் இருந்தே சமூக சேவை சிந்தனையோடுதான் நான் வளர்க்கப்பட்டேன். அதனால்தான் இப்போது 32 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறேன்.

அந்த குழந்தைகளுக்கான உணவு, படிப்பு செலவுகள் அனைத்தையும் கவனித்துக்கொள்கிறேன். எனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு குழந்தையை தத்தெடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறேன். படப்பிடிப்புக்காக வெளியூர்களில் இருந்தாலும் அடிக்கடி போன் செய்து குழந்தைகள் பற்றி விசாரிக்கிறேன். பண்டிகை நாட்களை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறேன்.

அடுத்து, வயதானவர்களுக்கு முதியோர் இல்லம் கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன். ஒவ்வொருவரும் ஆதரவற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். இந்த சுதந்திர தின நாளில் பெண்களின் உரிமைகள் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்து விட்டதா? என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

தனியாக பெண்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. பாலியல் தொல்லைகளில் பல பெண்கள் சிக்குகிறார்கள். இந்த தொந்தரவுகளில் இருந்து அவர்கள் விடுபடும் நாள்தான் முழு சுதந்திரம் கிடைத்ததாக கருத முடியும்.”
1 More update

Next Story