இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு வாழ்வது போன்ற அவஸ்தை - கங்கனா ரணாவத் அனுபவம்


இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு வாழ்வது போன்ற அவஸ்தை - கங்கனா ரணாவத் அனுபவம்
x
தினத்தந்தி 7 Jan 2018 3:15 PM IST (Updated: 7 Jan 2018 3:07 PM IST)
t-max-icont-min-icon

இந்தி திரை உலகின் கவர்ச்சி சூறாவளி, கங்கனா ரணாவத். பிரபல நடிகையான இவர் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர்.

குறிப்பாக ஆணாதிக்கம் பற்றி அச்சமின்றி பேசுபவர். பாலிவுட்டில் கோலோச்சும் ஜாம்பவான்களுக்கு எதிராகவும் துணிந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதோடு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான இடத்தையும் ரசிகர்களிடம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் ஆக்ரோஷமான சண்டை காட்சியில் நடித்தபோது படுகாயம் அடைந்து தேறியிருக்கிறார். அவர் ஜான்சி ராணி கதாபாத்திரம் பற்றியும், தனது திரையுலக அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்!

நீங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?


‘‘ஒரே மாதிரியான கதாபாத்திரம் பார்ப்பவர்களுக்கும், நடிப்பவர்களுக்கும் அலுப்பை ஏற்படுத்தும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் என்றால் இயக்குனர்களுக்கு நான்தான் நினைவுக்கு வருகிறேன். எனக்கும் அதுதான் பிடித்திருக்கிறது. என்னுடைய இமேஜ் இப்படியே தொடரட்டும்’’

இந்தி திரை உலகம் கற்றுக்கொடுத்திருக்கும் வாழ்க்கைப் பாடம் என்ன?

‘‘பாலிவுட் வாழ்க்கை சவாலானது. இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு அனுசரித்து போவது போன்று இது இருக்கிறது. எந்த நேரம் என்ன நடக்கும் என்பது தெரியாது. எப்போதும் ஒரு போட்டி மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். அது வெளியே தெரியாது. இங்கு யாரும் யாரையும் புரிந்து கொள்ளவே முடியாது. சுனாமிக்கு நடுவே படகு ஓட்டுவதை போலத்தான் எதையும் பதற்றத்துடன் கையாள வேண்டியிருக்கிறது’’

வெற்றி பெற்ற நட்சத்திரங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்குமே?

‘‘நிறையவே இருக்கும். அதில் கசப்பான அனுபவங்கள்தான் அதிகம் மனதில் குடிகொண்டிருக்கும்’’

நீங்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறீர்களே, ஏன்?


‘‘சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் ஆசை எதுவும் எனக்கு இல்லை. நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்தில் என்னை சுற்றி என்னென்னவோ நடந்து விடுகிறது. அதில் என் உரிமைக்காக போராட வேண்டியிருக்கிறது. அதனால் கெட்ட பெயரும் வாங்க வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் நடிகையாகி இப்படியெல்லாம் அவஸ்தைப்பட வேண்டும் என்பது என் தலையெழுத்து என்று என்னை நானே நொந்து கொள்வேன்’’

நீங்கள் நடித்த ‘சிம்ரன்’ படத்தின் கதாபாத்திரம் உங்களுக்கு பிடித்தமானதா?

‘‘ஆமாம். காரணம் அது சந்தீப் கவுர் என்ற பெண்ணின் திகிலான வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. அவர் பெருங் கடனாளியாகி கடன் தொல்லை தாங்காமல் அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடித்தார். மிக சாமர்த்தியமாக கொள்ளையடித்தும் மாட்டிக் கொண்டார். அதனை மையக்கருவாகக் கொண்டு, வீட்டு வேலை செய்யும் ஒரு சாதாரண பெண், பணத்திற்கு ஆசைப்பட்டு வங்கி கொள்ளையர்களோடு கூட்டு சேர்ந்து நடத்தும் சதி செயல்கள்தான் படத்தின் பின்னணி. பணத்தேவையும், பேராசையும் மிக மோசமான சூழ்நிலைக்கு நம்மை இழுத்துச் சென்றுவிடும் என்பதுதான் கதையின் சாராம்சம்’’

நீங்கள் ஷாருக்கானோடு சேர்ந்து நடிக்க மறுத்ததற்கு என்ன காரணம்?

‘‘எனக்கென்று தனி இமேஜை உருவாக்க நினைக்கிறேன். ஆலமரத்தின் நிழலில் செடிகள் வளராது. ஆனால் நான் வளர நினைக்கிறேன்’’

நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம்?


‘‘இந்திய பெண்ணாக இருப்பதே பெருமைக்குரிய விஷயம்தான். நம் நாட்டு வீரப்பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிப்பதும் பெருமைதான். வாழ்க்கை எவ்வளவுதான் போராட்டமாக இருந்தாலும் அதில் ஒரு சுவாரசியம் இருக்கத்தானே செய்கிறது’’

மணிகர்னிகா படத்தில் படுகாயம் அடைந்தது எப்படி?

‘‘எந்த வாய்ப்பையும் தவற விட்டுவிடக்கூடாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால் ‘ரிஸ்க்’ எடுத்து வேலை செய்வது பெரிய விஷயமாக தோன்றாது. அந்த படத்தில் ஒரு காட்சியில் கத்திச்சண்டை போடவேண்டியிருந்தது. ஆக்ரோஷமாக சண்டை காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது நெற்றியில் காயம் ஏற்பட்டுவிட்டது. 15 தையல்கள் போட்டார்கள். இப்படி பல இடையூறுகள் பெண்களுக்கு ஏற்படத்தான் செய்கிறது’’

படப்பிடிப்பில் காயமடைந்தபோது என்ன நினைத்தீர்கள்?

‘‘சினிமாவில் நடிக்கவே இவ்வளவு காயப்பட வேண்டியிருக்கிறதே. நிஜ வாழ்க்கையில் ஜான்சி ராணி எவ்வளவு காயப்பட்டிருப்பார். எவ்வளவு ரத்தம் சிந்தியிருப்பார் என்று நினைத்து பார்த்தேன். அவர் பெயரை சொன்னாலே பெண்களுக்கு வீரம் வரும். அதுதான் அவர் புகழுக்கு காரணம். நான் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த வீரத்தழும்பு எனக்கு ஒரு நினைவுச் சின்னம்”

நீங்கள் நடிக்கும் படங்களில் உங்களைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

‘‘ஆமாம்! அதில் தவறில்லை. அதை என் உழைப்பிற்கு கிடைத்த உயர்வாக கருதுகிறேன். நான் பிரதான கதாபாத்திரமாக அமைந்திருக்கும் படங்களில் என்னை முன்னிலைப்படுத்துவதில் தவறு இல்லை. எனக்கென்று ஒரு இமேஜ் இருக்க வேண்டும்’’.

Next Story