குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் கவர்ச்சி நடிகை


குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் கவர்ச்சி நடிகை
x
தினத்தந்தி 30 Sep 2018 9:13 AM GMT (Updated: 30 Sep 2018 9:13 AM GMT)

இந்தி திரை உலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் கவர்ச்சி நடிகை ஹுமா குரேஷி.

கட்டுடலை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்தும் இவர், தேவைக்கு தக்கபடி திரையில் உடலைக் காட்டுவதற்கும் தயாராக இருப்பதால் இவரது சினிமாக்களில் கவர்ச்சி மழைக்கு பஞ்சம் இருப்பதில்லை. இவர் இதர முன்னணி நடிகைகளில் இருந்து வித்தியாசமானவராக காணப்படுகிறார். பொதுவாக சினி மாவில் பிரபலமாக இருக்கும்போது நடிகைகள் டி.வி. வாய்ப்புகளை ஏற்றுக்கொள் வதில்லை. ஆனால் இவரோ அந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொண்டு டி.வி.யிலும் தலைகாட்டுகிறார். அதற்கு என்ன காரணம்? இதோ, ஹுமா குரேஷியே கூறுகிறார்:

டி.வி.யில் ரியாலிட்டி ஷோ ஒன்றை நீங்கள் தொகுத்து வழங்க என்ன காரணம்?

அதிகமான பேரைச் சென்றடையலாம், ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாகலாம் என்பது தான் அதற்கான காரணம். ஆனால் எந்த வகையான நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நடனம் சார்ந்த நிகழ்ச்சியை வழங்குவதா அல்லது அதிரடி காட்சிகள் நிறைந்த நிகழ்ச்சியை வழங்குவதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான், குழந்தைகளின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு தேடி வந்தது. அது எனக்குச் சரியானதாகத் தோன்றியது. அந்த ரியாலிட்டி ஷோவுக்கு நான் ஒப்பந்தமானபோது, நீங்கள் ஏன் இதற்கு ஒப்புக்கொண்டீர்கள் என்று பலரும் கேட்டார்கள். குழந்தைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்களைவிட குழந்தைகள் மத்தியில் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நிகழ்ச்சியை உங்களுடன் இணைந்து வழங்கும் மற்ற இருவரைப் பற்றி?

என்னுடன் இந்த நிகழ்ச்சியை வழங்கும் நடிகர் விவேக் ஓபராயும், இயக்குநர் ஓமங் குமாரும் திறமையானவர்கள். என்னைவிட மூத்தவரான விவேக் ஓபராய், இந்த நிகழ்ச்சி தொடங்கியது முதல் அவர்களோடு இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நாங்கள் தடுமாறும்போது அவர் கைகொடுக்கிறார். நானும் ஓமங்குமாரும் புதியவர்கள் என்றாலும், ஓமங்குமார் மிகவும் துடிப்பானவர். ஓமங் குமாரை நான் ஒரு சீரியசான இயக்குநராகத்தான் பார்த்து வந்திருக்கிறேன். அவருக்குள் உள்ள கலகலப்பான மறுபக்கத்தை இந்த ரியாலிட்டி ஷோ வெளிப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியை வழங்குவதில் உங்களுக்கு கடினமாக இருந்தது எது?

குழந்தைகளின் மனதைப் புண்படுத்திவிடாமல், ஆக்கபூர்வமான விமர்சனங்களைக் கூறுவது சற்று கடினமானதுதான். பொதுவாக நாம் சில நேரங்களில் குழந்தைகளிடம் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்திவிடுவது உண்டு. அது சரியல்ல. தங்கள் கனவுகள், ஆசைகளுடன் வரும் குழந்தைகளை நாம் கவனமாகக் கையாள வேண்டும். குழந்தைகளிடம் நாம் நல்ல, நேர்மையான விமர்சனக் கருத்துகளைக் கூற வேண்டும். அப்போதுதான் அது அவர்கள் வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்கும். அவர்களை சோர்ந்துபோகச் செய்யாமல், ஊக்குவிக்கும் வகையில் நமது வார்த்தைகள் அமைய வேண்டும்.

நீங்கள் சந்தித்த குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயம்?

பொறுமை, கடின உழைப்பு, பொறுப்புணர்வு ஆகிய வற்றையும், நாம் எப்போதும் சீரியசாக இருக்கக் கூடாது என்பதையும் குழந்தைகளிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.

உங்களிடமும் குழந்தைப் பருவத்திலேயே நடிப்பு ஆசை இருந்ததா?

எனக்கும் அந்த ஆசை சிறுவயதிலேயே இருந்தது. அதனால்தான் கல்லூரிப் படிப்பை முடித்ததும் நான் ஒரு நாடகக் குழுவில் இணைந்தேன். அதிர்ஷ்டவசமாக நான் நடிப்புக் கலையை திறமையான பல மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. அவர்கள் என் வாழ்க்கையில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு நான் இணைந்து பணியாற்றிய இயக்கு நர்கள், சக நடிகர், நடிகைகள் எல்லோருமே காரணம்.

நீங்கள் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் எதைப் போன்றவர் நீங்கள்?

உண்மையைக் கூறுவது என்றால், நான் எந்தக் கதாபாத்திரம் போன்றவளும் இல்லை. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்கள் எதுவும் என்னைப் பிரதிபலிப்பதாக இல்லை. நான் எந்த மாதிரியானவள் என்பதை இந்த டி.வி. நிகழ்ச்சி மூலமாகத்தான் மக்கள் அறியப் போகிறார்கள்.

ஒரு நடிகையாக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் போராட்டமான காலகட்டம் உண்டு. நான் மும்பையை சேர்ந்தவள் இல்லை. மும்பை படவுலகம் எப்படி இயங்குகிறது என்று எனக்குத் தெரியாது. நான் நடிக்கத் தொடங்குவதற்கு முன் ஒரு திரைப்பட செட்டுக்கு சென்றதோ, கேமரா முன் நின்றதோ கிடையாது. நான் மும்பையில் பிறந்திருக்க வேண்டும் அல்லது யாராவது எனக்குக் கைகொடுக்க வேண்டும் என்று விரும்பியது உண்டு. ஆனால் அதற்காக வருத்தப்பட்டது இல்லை. நான் என்னைப் பொறுத்தவரை நன்றாகவே செயல்பட்டிருக்கிறேன். நிறைய சவால்களை சந்தித்து வென்றிருக் கிறேன்.

சினிமாத் துறையில் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம்?

சினிமாத் துறையினர் இன்னும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும், நடிகர், நடிகைகள் கதையைப் படித்து அறிவதற்கும், தங்கள் கதாபாத்திரங்களுக்குத் தயாராவதற்கும் இன்னும் அதிக நேரம் கொடுக்க வேண்டும். திரைப் படங்கள் சிறப்பாக வெளிவர அது உதவும். இங்கே எல்லோருக்கும் பணி நேர வரையறையும் இன்னும் சரியாக இருக்க வேண்டும்.

உங்களைப் பொறுத்தவரை வெற்றி என்பது எது?

சம்பாதித்த பணத்தை வைத்து நான் எனது வெற்றியை மதிப்பிடுவதில்லை. மாறாக, நான் எந்த வகையில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறேன் என்பதைப் பொறுத்தே வெற்றியை மதிப்பிடுகிறேன். 

Next Story