திரிஷாவின் சர்க்கரை பொங்கல்
இளைஞர்களின் கனவு தேவதை திரிஷாவின் தித்திப்பான பேட்டி...
விண்ணை தாண்டி வருவாயா - ஜெஸ்சியைப்போல், ‘96’ நாயகி ஜானுவைப்போல் அழகான நீங்கள், 1999-ல் ‘மிஸ் மெட்ராஸ்’ பட்டத்தை வென்றீர்கள். அதன்பிறகு ‘மிஸ் இந்தியா’ பட்டத்துக்கு போட்டியிட்டது உண்டா?
“2001-ல் நடந்த ‘மிஸ் இந்தியா’ போட்டியில் கலந்து கொண்டேன். அதன் பிறகு நான் சினிமாவுக்கு வந்து விட்டதால், அழகி போட்டியில் கலந்து கொள்ளவில்லை.”
காதல் படங்களில் உங்களை நிறைய பார்த்து விட்டோம். அடுத்து ஒரு ‘மாஸ்’ கதாநாயகியாக உங்களை பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?
“மாஸ் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலே, ‘மாஸ்’ கதாநாயகி ஆகிவிடுகிறோம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அது வெற்றி பெறும்போது, பார்க்கலாம். ‘96’ படத்தின் வெற்றியை தொடர்ந்து எனக்கு நிறைய காதல் பட வாய்ப்புகள் வருகின்றன. தினம் இரண்டு மூன்று பேர்களிடம் கதை கேட்டு வருகிறேன். இதுவரை 50 பேர்களிடம் கதை கேட்டு விட்டேன். படம் பார்த்து விட்டு வீடு திரும்பிய பிறகும் கண்ணுக்குள் நிற்குமே அது மாதிரி கதைக்காக காத்திருக்கிறேன்.”
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் அத்தனை பேருடனும் ஜோடியாக நடித்து விட்டீர்கள். அடுத்து யாருடன் ஜோடியாக நடிக்க ஆசை?
“ஏறக்குறைய எல்லா கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து விட்டேன். ரஜினிகாந்துடன் மட்டும் ஜோடி சேரவில்லையே என்ற வருத்தம் இருந்து வந்தது. ‘பேட்ட’ படத்தின் மூலம் அதுவும் தீர்ந்தது. அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே ‘பேட்ட’ படத்தில் நடிக்க சம்மதித்தேன். அதில், என் கதாபாத்திரம் சின்னதுதான் என்றாலும், மனதில் நிற்கிற மாதிரி ஒரு வேடம்.”
கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என பல படங்களில் விஜயுடன் ஜோடியாக நடித்து விட்டீர்கள். அடுத்து அவர் படத்தில் உங்களை எப்போது பார்க்கலாம்? அவருடன் நடித்த படங்களில், உங்களுக்கு பிடித்த படம் எது?
“நான் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு பொருத்தமான கதாபாத்திரம் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் விஜய் ஜோடியாக நடிப்பேன். அவருடன் நான் நடித்ததில், ‘கில்லி’ எனக்கு பிடித்த படம். என் கதாபாத்திரம் அப்படி. ஜெஸ்சி, ஜானு ஆகிய இருவருக்கும் மூத்த சகோதரி, ‘கில்லி’ தனலட்சுமிதான்!”
உங்கள் ஒல்லியான உடற்கட்டை எப்படி இன்னும் வசீகரமாக பாதுகாக்கிறீர்கள்? அதன் ரகசியத்தை சொல்வீர்களா?
“நான் ஒல்லியாக இருப்பதற்கு ‘ஸ்பெஷல்’ ஆக எதுவும் செய்வதில்லை. பட்டினி கிடப்பதும் இல்லை. நன்றாக சாப்பிடுகிறேன். அதிகமாக சாப்பிட்டு விட்டோமோ என்ற உணர்வு எழும்போது, அடுத்த நாள் வெறும் சூப் அல்லது சாண்ட்விச்சோடு நிறுத்திக் கொள்வேன்.”
‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் எப்படி? மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால், எது மாதிரி வேடத்தில் நடிக்க ஆசைப்படுவீர்கள்?
“96 படத்தில் நான் சிறப்பாக நடித்ததாக ரஜினிகாந்த் போனில் என்னை அழைத்து பாராட்டினார். ‘பேட்ட’ படத்தில், நான் ஒரு சின்ன வேடத்தில்தான் நடித்து இருக்கிறேன். ரஜினிகாந்துடன் அடுத்து ஒரு படவாய்ப்பு வந்தால், படத்தின் கதாநாயகியாக படம் முழுவதும் வந்து போகிற மாதிரி நடிக்க ஆசைப்படுகிறேன். ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்றபோது, ரஜினிகாந்துடன் உட்கார்ந்து பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் எவ்வளவு அற்புதமான மனிதர் என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டேன். இவருடன் இத்தனை நாட்களும் பழகாமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டேன்.”
வெற்றியையும், தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
“நான் எப்போதுமே எந்த விஷயத்துக்காகவும் மனசை போட்டு வருத்திக் கொள்வதில்லை. வெற்றி வரும்போது, சந்தோஷப்படுவேன். தோல்வி வரும்போது, இதுவும் கடந்து போகும் என்று கருதிக் கொள்வேன்.”
அடிக்கடி வெளிநாடு செல்லும் ரகசியத்தை கூற முடியுமா?
“எனக்கு பயணிப்பது பிடிக்கும். நீண்ட தூர பயணத்தை விரும்புவேன். நான் போகாத நாடு இல்லை. அநேகமாக உலகம் முழுவதிலும் சுற்றி விட்டேன்.”
திருமணம் செய்து கொள்ளவில்லையே என்ற கவலை இல்லையா?
“நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். ஆனால், இதுவரை எனக்கு காதல் வரவில்லை. என் மனசுக்கு பிடிக்கிற மாதிரி ஒருவரை சந்திக்கணும். அவர் மீது எனக்கும், என் மீது அவருக்கும் காதல் வரணும். அது இன்று அமைந்தாலும் சரி. நாளை அமைந்தாலும் சரி. நடக்கும்போது நடக்கட்டும். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.”
உங்களுக்கு வரப்போகிறவர் சிவப்பாக, ஒல்லியாக, அழகாக இருக்க வேண்டுமா?
“எனக்கு வரப்போகிறவர் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. எனக்கு கருப்பு ரொம்ப பிடிக்கும். வெள்ளையாக இருந்தால்தான் அழகு என்று நான் கருதுவதில்லை. கருப்பு நிறமும் அழகுதான்.”
பொங்கல் கொண்டாட்டத்தை பற்றி..?
“பொங்கல் அன்று நான் வீட்டில்தான் இருப்பேன். சர்க்கரை பொங்கல் எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னைப் போலவே எல்லோருக்கும் இது இனிப்பான பொங்கலாக அமைய வாழ்த்துகள்.”
Related Tags :
Next Story