தமன்னாவின் கட்டுடல் ரகசியம்


தமன்னாவின் கட்டுடல் ரகசியம்
x
தினத்தந்தி 16 Jan 2019 12:36 PM IST (Updated: 16 Jan 2019 12:36 PM IST)
t-max-icont-min-icon

நடிகை தமன்னாவிடம் பேசியபோது சினிமா, சொந்த வாழ்க்கை, சமூகம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டி:-

தமிழ், தெலுங்கில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள தமன்னா 14 வருடங்களாக மார்க்கெட் குறையாமல் நடித்து வருகிறார். பாகுபலி படத்துக்கு பிறகு சிறந்த நடிகை என்றும் பெயர் வாங்கி உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங் களில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. சினிமாவுக்கு வந்த புதிதில் பார்த்த மாதிரியே இப்போதும் பளிச்சென்று இருக்கிறார் தமன்னா. 

* புத்தாண்டு ஆசைகள் என்ன?

புத்தாண்டில் ஒவ்வொருவர் மனதிலும் நல்ல வேண்டுதல்கள் இருக்கும். எப்படி இருக்க வேண்டும் என்ன முடிவுகள் எடுக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்கும் தருணம் இது. எனக்கும் ஆசைகள் இருக்கிறது. ‘ஹேப்பி டேஸ்’ படத்துக்கு பிறகு ரொம்ப பிஸியான நடிகையானேன். கடந்த வருடத்திலும் அதிகமான படங்களில் நடித்தேன்.

எப்போதும் படப்பிடிப்பு தளங்களிலேயே இருக்க வேண்டிய நிலைமை இருந்தது. இப்போது தெலுங்கில், ‘சைரா நரசிம்ம ரெட்டி,’ தமிழில் இன்னொரு படம். இந்தியில் வந்த ‘குயீன்’ படம் தெலுங்கில் ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதிலும் நடிக்கிறேன். விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டு இருக்கிறேன். இந்த வருடம் மேலும் அதிக படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது.

* நடிகைகளுக்குள் போட்டி உணர்வு இருக்கிறதா?

இப்போது இருக்கிற எல்லா நடிகைகளுக்கும் போட்டி உணர்வு இருக்கிறது. அதே நேரம் சுயகட்டுப்பாடும் உள்ளது. வெற்றி பெற வேண்டும் என்றால் ஒழுக்கம் முக்கியம். நான் ஒரே நேரத்தில் எத்தனை படங்கள் நடித்தாலும், எந்த படத்துக்கும் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்குவேன். எனது சினிமா வாழ்க்கை பத்து வருடங் களுக்கு மேலாக நீடிப்பதற்கு இதுகூட ஒரு காரணம்.

இந்த வருடம் எனக்கு அடுத்தடுத்து படங்கள் திரைக்கு வருகிறது. இதனால் உற்சாகமாக இருக்கிறேன். இத்தனை வருடங்களாக ஓய்வில்லாமல் நடிச்சுட்டு இருக்கிறேன். சினிமாவை தொழில் ரீதியாக பார்த்தால் ரொம்ப நல்லது. ஆனால் ஓய்வில்லாமல், உடம்பை கஷ்டப்படுத்தி வேலை செய்வது என்பது ஆரோக்கியத்துக்கு அவ்வளவு நல்லது இல்லை. அதனால் இந்த ஆண்டில் இருந்து படப்பிடிப்புக்கு மத்தியில் ஓய்வு எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

* நடிகையானதால் குடும்பத்தினருடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

படங்களில் தொடர்ந்து நடிப்பதால் வீட்டையும், குடும்பத்தினரையும் பிரிந்து இருக்கிறோம் என்ற வேதனை இருக்கிறது. இதனால் கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் அப்பா, அம்மாவை பார்க்க மும்பைக்கு ஓடிப்போகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் படப்பிடிப்புக்கு அம்மா என்னுடன் வந்தார். இப்போது உடம்பு அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் நானே சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் வீட்டில் ஓய்வு எடுங்கள் என்று சொல்லி விட்டேன்.

* பத்து வருடங்களுக்கு மேல் சினிமாவில் நீடிக்க ஏதேனும் ரகசியம் வைத்திருக்கிறீர்களா?

என்னை எப்போதும் நான் ஒரு கதாநாயகியாக பார்த்தது இல்லை. ஒரு நடிகை என்ற உணர்வு மட்டும்தான் உள்ளது. அவ்வப்போது மாறுபட்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதற்கேற்ற மாதிரி கதைகளும் தேர்வு செய்கிறேன். ‘பாகுபலி’ படத்தில் நான் நடித்த அவந்திகா கதாபாத்திரத்தை மறக்க முடியாது. அதுமாதிரி புதிய கதாபாத்திரங்களை தேடுகிறேன். என் சினிமா வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் பெற்று கொடுக்கும் கதாபாத்திரமாக அவந்திகா வேடம் அமைந்தது.

* திருமணம் செய்து கொண்டால் படங்கள் குறைந்து விடும் என்று நினைத்து நடிகைகள் தங்கள் திருமணங்களை தள்ளிப்போடுகிறார்கள் என்பது சரியா?

திருமணம் ஆனால் படங்கள் குறையும் என்பதை நான் ஏற்க மாட்டேன். சமந்தாவைப் பாருங்கள். திருமணம் ஆனபிறகும் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தி நடிகை கரீனா கபூருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தைகூட பிறந்து விட்டது. இன்னும் அவர் படங்களில் பிஸியாக நடிக்கிறார். வித்யாபாலனும் அப்படித்தான். இன்னும் நிறைய பேரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆண்களுக்கு திருமணமானால் நடிப்பதை விட்டு விடுகிறார்களா என்ன? பெண்களுக்கு மட்டும் எதற்கு இந்த மாதிரி தடைகள். திருமணம் ஆனதும் நடிப்பதை விட்டு விட வேண்டும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சினிமாவை மறந்து விடவேண்டும் என்று சொல்வதை கேட்கும்போதெல்லாம் எனக்கு விசித்திரமாக இருக்கும். திருமணம் நடந்தால் சினிமாவை விட்டுவிட வேண்டும் என்ற மாயையில் எனக்கு உடன்பாடு இல்லை. திருமணத்துக்கு பிறகு நடிப்பதா, வேண்டாமா என்பது அந்த பெண்ணின் விருப்பத்தை பொறுத்தது. திருமணம் என்பது சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற எண்ணத்தையே சுத்தமாக அழிச்சிடணும்.

* சினிமாவுக்கு பின்னால் சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறீர்கள்?

சினிமா மாதிரி என் சொந்த வாழ்க்கையும் கவர்ச்சியாக இருப்பதாக நினைக்க கூடாது. படப்பிடிப்பு முடிந்ததும் எல்லா பெண்கள் மாதிரிதான் நடிகைகளும் இருப்பார்கள். மற்ற பெண்கள் மாதிரிதான் சாப்பிடுவோம். வீட்டில் எல்லோருடனும் கஷ்டம் நஷ்டங்களை பகிர்ந்து கொள்வோம். நல்ல விஷயம் நடந்தால் சந்தோஷப்படுவோம். நடக்கக் கூடாதது நடந்தால் எல்லோரையும் மாதிரி நாங்களும் வருத்தப்படுவோம். நாங்களும் மனுஷங்கதான்.

* சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போது வரை உடல் தோற்றத்தை ஒரே மாதிரி எப்படி வைத்துள்ளர்கள்?

எதையும் அதிகமாக செய்யாமல் இருப்பதுதான் அதற்கு காரணம். உடற்பயிற்சி அதிகமாக செய்தாலும் உணவு அதிகமாக எடுத்தாலும் கஷ்டம்தான். சராசரி பெண்கள் போல வாழ வேண்டும். அவரவர் உடல்வாகு எப்படியோ அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். யோகா நம் கலாசாரத்தில் இருக்கிறது. நான் யோகா செய்கிறேன். யோகா நம்மை அமைதியாக வைக்கிறது.

* அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறி விட்டீர்களே எப்படி?

சமீபத்தில் எனது சிறிய நாய் குட்டியின் ஆரோக்கியம் கெட்டுப்போனது. அது சீக்கிரமாக நலமடைய பிரார்த்தனை செய்தேன். அது குணமாவது வரை மாமிச உணவை தொடக்கூடாது என்று முடிவு செய்தேன். அது சீக்கிரமாக நலமாகி விட்டது. சைவ உணவு சாப்பிட்டபோது உடலும் மனதும் நன்றாகவே இருந்தது. எனவே முழுமையாக சைவத்துக்கு மாறிவிடலாம் என்று முடிவு செய்து மாறிவிட்டேன். இந்த பொங்கல் எல்லோருக்கும் இனிய பண்டிகையாக அமையட்டும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

Next Story