கவர்ச்சி நடனத்தில் கலக்கும் சோனாக்ஷி
சோனாக்ஷி சின்கா, இந்தி திரை உலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகை. இவர் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.
குறிப்பாக நடனத்தில் தனிக்கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் அவர் நடனம் ஆடிய ‘முங்கடா’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆகி யிருக்கிறது. அது அவரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி யிருக்கிறது.
சோனாக்ஷி சின்காவிடம் சில கேள்விகள்:
‘முங்கடா’ பாடலுக்காக நீங்கள் ஆடிய கவர்ச்சி நடனம் இவ்வளவு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்தீர்களா?
அது ஏற்கனவே சூப்பர் ஹிட்டான பாடல்தான். 1977-ல் வெளிவந்த ‘இன்கார்’ படத்தில் பிரபல கவர்ச்சி நடிகை ஹெலன் அந்த பாடலுக்கு அற்புதமாக ஆடியிருந்தார். அதனுடைய ரீமிக்ஸ் மறுபதிப்பு பாடலுக்கு நான் தற்போது ஆடியிருக்கிறேன். மீண்டும் அது ஹிட்டாகி இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் புரிந்து விட்டது. ஹெலன் ஆன்டியின் ஆட்டத்திற்கு இணையாக யாராலும் ஆடமுடியாது. ஆட்டத்திற்கென்றே பிறந்த அவரை யாராலும் மிஞ்ச முடியாது. அவர் ஆடுவதற்கு ஏற்ற விதத்தில் தனது உடலையும் கட்டுக்குலையாமல் வைத்திருந்தார். முங்கடா பாடலுக்கு நான் அஜய்தேவ்கானுடன் இணைந்து ஆடினேன்.
உங்கள் ஆட்டத்தை பார்த்துவிட்டு ஹெலன் என்ன சொன்னார்?
நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அதனால் அவரை நேரில் சந்தித்து கருத்து கேட்க விரும்புகிறேன். அவர் அருகில் இருந்து நான் ஆடிய ஆட்டத்தை காண விரும்புகிறேன். பார்க்கும்போது அவர் முகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் காண ஆவலாக இருக்கிறேன். மேலும் இரண்டு பாடல்கள் அவருடைய படத்தில் இருந்து எடுக்கப்பட்டு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதிலும் நான் ஆட இருக்கிறேன். ஆடி முடிந்த பின்பு ஹெலன் ஆன்டியை அழைத்து அவரது கருத்தைக்கேட்பேன். அவரது கருத்து எனது திரை உலக வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
இந்த ஆண்டு நீங்கள் நடித்த நான்கு படங்கள் வெளிவர இருக் கிறதே?
நான்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள். ஒன்றாக வெளிவரும் படங்களில் வேறுபட்ட கதாபாத்திரங்கள் மிக அவசியம். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதுதான் நடிகையின் முக்கியமான வேலை. முற்றிலும் வித்தியாசமான கதை என்று சொல்லிக்கொண்டு ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை நம்மிடம் திணிக்க சில டைரக்டர்கள் முயற்சிப்பார்கள். அவர்களிடம்தான் நடிகைகள் வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
நடிக்கும்போது நீங்கள் கஷ்டமாக உணரும் விஷயம் எது?
ஒரு கதாபாத்திரத்தின் சாயல் இன்னொரு கதாபாத்திரத்தில் விழாத அளவுக்கு கவனமாக நடிக்கவேண்டும். இது ஒரு சவாலான விஷயம். அப்படி வித்தியாசத்தை காட்டும்போது சில நேரங்களில் நான் கஷ்டத்தை உணருவேன்.
காமெடி சினிமா ஒன்றிலும் நடிக்கிறீர்களாமே?
ஆமாம். அது ஒரு வித்தியாசமான படம். ‘ஸ்லைஸ் ஆப் லைப்’ என்பது படத்தின் பெயர். அதில் எனக்கு முழுமையான நகைச்சுவை கதாபாத்திரம். அதனுடைய படப்பிடிப்பு அமிர்தசரசில் நடைபெற்றது. இன்றைய சமூக சூழல் பற்றி விளக்கும் கதை. எவ்வளவு பெரிய விஷயத்தையும் நகைச்சுவை மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம் என்பதை இந்த சினிமா நிரூபிக்கும். சமூகத்திற்கு தேவையான பல நல்ல செய்தி கள் அதில் உள்ளன. இதில் வருண் சர்மா என் சகோதரராக நடித்திருக் கிறார். இயக்குநர் சில்பி தாஸின் முதல்படம்.
‘கலங்’ என்ற படத்தில் பிரபலமான நடிகர்கள் பட்டாளத்துடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறீர்களே?
பிரபலமான நடிகர்கள் பலருடன் இணைந்து நடிப்பது சவாலானது. அவர்கள் நடுவில் நாம் பிரகாசிக்க வேண்டுமானால் நிறைய உழைப்பு தேவை. அது ஒரு தனி அனுபவம். தனித்து நடித்து பெயர் வாங்குவது பெரிய விஷயமல்ல. மல்டி ஸ்டார்களின் நடுவே நடித்து ஸ்டார் ஆவதற்கு தனித்திறமைதேவை. கலங் படத்தில் அப்படிப்பட்ட களத்தில் நான் நிற்கிறேன். அதில் வருண் தவான், சஞ்சய் தத், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர், மாதுரி தீட்சித் போன்ற பலருடன் நானும் நடிக்கிறேன்.
நடிகர் பண்டி சச்தேவுடன் உங்களை இணைத்து தொடர்ந்து பேசி வருகிறார்களே?
ஆதாரமில்லாமல் பேசப்படுவது எல்லாம் வதந்தி தான். அப்படி பேசுவதில் சிலருக்கு ஒரு அலாதி சந்தோஷம். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நம்மைச் சுற்றி நடக்கும் எதையும் தடுக்க முடியாது.
ஆனால் நீங்கள் பண்டி பற்றி கேட்கும்போது வெளிப்படையாக பேச மறுக்கிறீர்கள்..?
வேறென்ன செய்வது! என் வாழ்க்கையைப் பற்றி நான் சொல்வது மட்டுமே உண்மைச் செய்தி. மற்றவர் களின் கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. என்னைப் பற்றி எனக்கே தெரியாத பல விஷயங்கள் ஊடகங்களில் வருகிறது. இது மிகவும் அநாகரிகமானது.
நீங்கள் பண்டியோடு ‘டேட்டிங்’ சென்ற போட்டோ வெளிவந்திருக்கிறதே?
ஒரு போட்டோ உங்களுக்கு எல்லா உண்மைகளையும் சொல்லவிடுமா! என் அனுமதி இன்றி என் போட்டோவை வெளியிடுவது தவறு அல்லவா! பண்டி என்னுடைய நல்ல நண்பர். சல்மான் கானுடைய சகோதரர் சுஹைல் கானின் மனைவி கீமா கானுடைய தம்பி. மும்பையைச் சேர்ந்தவர். பண்டி சச்தேவ் சினிமாவோடு தொடர்புடையவர். அவருடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு என்னையும் அழைத்திருந்தார். நானும் மரியாதைக்காக சென்று பார்ட்டியில் கலந்து கொண்டேன். இதுதான் உண்மை. இதை வைத்துக்கொண்டு எத்தனையோ கதைகளை கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
Related Tags :
Next Story