‘நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ - நடிகை ரோமா


‘நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ - நடிகை ரோமா
x
தினத்தந்தி 6 Sept 2020 7:42 PM IST (Updated: 6 Sept 2020 7:42 PM IST)
t-max-icont-min-icon

காதலே என் காதலே என்ற சினிமாவில் அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு மொழிகளில் 20 படங்களில் நடித்திருப்பவர் ரோமா.

சில வருடங்கள் நடிப்பில் இருந்து விலகியிருந்த இவர், தற்போது வெள்ளப்பம் என்ற மலையாளப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகை ரோமா தமிழ்நாட்டில் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர்.

இவரிடம் சில கேள்விகள்:

நீங்கள் சினிமாவில் இருந்து சில வருடங்கள் விலகியிருந்தது ஏன்?

என்னை திருப்திபடுத்தும் விதத்திலான கதையோ, கதாபாத்திரங்களோ கிடைக்காததால்தான் நான் சில வருடங்களாக நடிக்கவில்லை. திரை உலகம் கற்பனைத் திறன்மிக்கது. எனக்கு திருப்தியான கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். சினிமாவில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்று 90 சதவீதம் பேர் சொல்கிறார்கள். எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லை. ஆனால் நான் சினிமாவிற்கு மிகுந்த மதிப்பளிக்கிறேன்.

சினிமாவில் நடிக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைக்காது. அப்படிப்பட்ட வாய்ப்பு நமக்கு கிடைக்கும்போது அதற்குரிய மரியாதையை நாம் கொடுக்கவேண்டும். இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் நமக்கு ஒருவித சோர்வு உருவாகிவிடும். திருப்தியான கதாபாத்திரங்கள் கிடைத்தால்தான் 100 சதவீத திறமையையும் கொடுத்து நடிக்க முடியும். ரசிகர்கள் மறந்துபோய்விடக்கூடாது என்பதற்காக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் கொள்கையில் எனக்கு உடன்பாடு கிடையாது.

நான் ஓய்வில் இருந்தபோதும் என்னைத் தேடி வாய்ப்புகள் வரத்தான் செய்தன. ஆனால் அந்த கதைகள் திருப்திதராததால் மூன்று வருடங்கள் நடிக்காமலே இருந்துவிட்டேன். நான் 2006-ல் சினிமாவுக்கு வந்தேன். அப்போதிலிருந்து இடைஇடையே ஓய்வு எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் திரை உலகம் என்னை கைவிட்டுவிடுமோ என்ற பயம் எனக்கு இல்லை.

ஒரு இடைவேளைக்குப் பிறகு டிராபிக் என்ற படத்தில் நடித்தேன். அப்படி ஒரு நல்ல படத்தில் மறுபிரவேசம் செய்தது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. அப்படித்தான் சிறந்த படங்கள் மூலமே ஒவ்வொருமுறையும் மறுபிரவேசம் செய்கிறேன். இனியும் நல்ல படங்கள் என்னைத்தேடி வரும் என்று நம்புகிறேன்.

பணத்திற்காக மட்டுமே வேலைபார்க்க வேண்டும் என்றால் அதற்கு வேறு துறைகள் இருக்கின்றன. 2006-ல் முதல் படத்தில் நடித்து, 14 வருடங்கள் ஆன பின்பும் இப்போதும் என் மனது பிரஷ் ஆக இருக்கிறது. இன்னும் பத்து வருடங்கள் வேகமாக செயல்படும் அளவுக்கு எனக்கு சக்தி இருக்கிறது.

இந்த இடைவேளை உங்களிடம் எத்தகைய மாற்றங்களை உருவாக்கியது?

எதையும் செய்யாமல் சும்மாவே இருக்கும்போதுதான் நம்மைநாமே சுயபரிசோதனை செய்கிறோம். அந்த இடைவேளை காலத்தில் நான் நிறைய பயணங்கள் செய்தேன். பயணத்தில் நிறைய அனுபவங்கள் நம்மை கடந்துபோகிறது. பழமைவாய்ந்த பிரபலமான பல கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் சென்றேன். அவைகளோடு தொடர்புடைய கதைகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தன. பல்வேறு நாடுகளுக்கு சென்றதால் அங்குள்ள வித்தியாசமான கலாசாரங்களை கண்டறிந்தேன். நிறைய சினிமாக்கள் பார்த்தேன். வேலை இல்லாமலே இருந்தபோதும் எனக்கு போரடிக்கவில்லை. அந்த ஓய்வு காலத்தை எனக்கு பிடித்த பொழுதுபோக்குகளுக்காக செலவிட்டேன்.

உங்கள் பெயருக்கு பின்னால் ‘எச்’ என்ற எழுத்தை சேர்த்திருக்கிறீர்களே.. இது எண்கணித ஜோதிடத்தின் அடிப்படையில் செய்த மாற்றமா?

எண்கணிதம் என்பது நம்மிடையே வெகுகாலம் இருந்து வரும் நம்பிக்கை. நான் அதில் சிறிதளவு கற்றிருக்கிறேன். ஒரு குருவிடம் இருந்து அதை நான் கற்றுக்கொண்டேன். எழுத்துக்களின் சக்தியை நாம் உணர்ந்துகொண்டால் மட்டுமே அதன் மீது நமக்கு நம்பிக்கை தோன்றும். அந்த நம்பிக்கையில்தான் என் பெயரின் இறுதியில் எச் சேர்த்துக்கொண்டேன்.

ரோமா என்ற பெண் எப்படிப்பட்டவர்?

குடும்பத்தோடு மிகுந்த நெருக்கம் காட்டுபவள். தியேட்டரில் போய் சினிமா பார்க்கவும், மால்களுக்கு ஷாப்பிங் செய்யவும் விரும்புவேன். வீட்டில் இருக்கவும் பிடிக்கும். குடும்பத்தின் மதிப்பை உணர்ந்தவள் நான்.

சோஷியல் மீடியா பற்றி உங்கள் கருத்து என்ன?

சமூகவலைத்தளங்களில் நான் ஈடுபாடு காட்டுவதில்லை. அதில் ஈடுபாட்டுடன் இருப்பவர்களில் பலர் என்னையும் அதில் ஆர்வம்காட்டும்படி சொன்னார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னோடு தொடர்புடைய விஷயங்களை தினமும் ‘அப்டேட்’ செய்துகொள்ள எனக்கு பிடிக்கவில்லை. நான் சினிமாவிற்கு வந்த புதிதில் சமூகவலைத்தளங்களின் பயன்பாடு இந்த அளவுக்கு இல்லை. அப்போது ரசிகர்களிடம் எப்படி தொடர்பில் இருந்தேனோ அப்படியே இப்போதும் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். சிலரின் விருப்பத்திற்காக இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கினேன். ஒரு வாரம் அதை உபயோகப்படுத்திப்பார்த்தேன். ஆனால் விருப்பம் உருவாகவில்லை. அதோடு அதையும் கைகழுவிவிட்டு என் உலகத்தில் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

பணத்திற்காக மட்டுமே வேலைபார்க்கவேண்டும் என்றால் அதற்கு வேறு துறைகள் இருக்கின்றன. 2006-ல் முதல் படத்தில் நடித்து, 14 வருடங்கள் ஆன பின்பும் இப்போதும் என் மனது பிரஷ் ஆக இருக்கிறது. இன்னும் பத்து வருடங்கள் வேகமாக செயல்படும் அளவுக்கு எனக்கு சக்தி இருக்கிறது.

Next Story