சிறப்பு பேட்டி

‘எனது கதாபாத்திரங்களால் வாழ்க்கையை கற்றுக்கொண்டேன்’- நடிகை டாப்சி + "||" + By my characters I learned life - Actress Topsy

‘எனது கதாபாத்திரங்களால் வாழ்க்கையை கற்றுக்கொண்டேன்’- நடிகை டாப்சி

‘எனது கதாபாத்திரங்களால் வாழ்க்கையை கற்றுக்கொண்டேன்’- நடிகை டாப்சி
டாப்சி தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து தெலுங்கு, இந்தி திரையுலகினர் மத்தியிலும் கவனம் பெற்றார்.
அறிமுகமான ‘ஆடுகளம்’ படத்திலேயே பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்த டாப்சி தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து தெலுங்கு, இந்தி திரையுலகினர் மத்தியிலும் கவனம் பெற்றார். இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அவருக்கு குவிந்து வருகின்றன.

தனது சினிமா வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை அவர் விளக்குகிறார்:

‘‘நான் திரையுலகுக்கு வந்த பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவில் அதற்குமேல் நீடிக்க முடியாது என்ற நிலைமை வந்தது. அதன்பிறகு எனக்கு என்ன பிடிக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ‘நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் என்று கிடைக்கும் பாராட்டை விட, இந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து இருக்கிறாய்’ என்று கிடைக்கும் பாராட்டுதான் உயர்ந்தது என்பது புரிய ஆரம்பித்தது. அதற்கு பிறகுதான் கதைகளை முதிர்ச்சியாக தேர்வு செய்ய ஆரம்பித்தேன். அந்த முடிவு எடுத்த பின்பு நான் நடித்த எல்லா படங்களிலும் டாப்சியை உங்களுக்கு தெரியவே தெரியாது. நான் நடித்த அந்தந்த கதாபாத்திரங்கள்தான் உங்களுக்கு தெரியும்.

தப்பட் (இந்தி) படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் அமிர்தா. வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் அவசர முடிவு எடுக்கக் கூடாது என்று அந்த கதாபாத்திரம் உணர்த்தியது. வாழ்க்கையில் பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை அமிர்தா கதாபாத்திரம்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. அதே மாதிரி பிங்க் என்ற இந்தி படத்தில் தைரியமான பெண்ணாக நடித்தேன். ‘ஏதாவது பிரச்சினை வந்தால் கடைசிவரை போராட வேண்டும். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, நம்மை விமர்சனம் செய்வார்கள் என்றோ பின்வாங்கவே கூடாது’ என்பதை அந்த படத்தின் கதாபாத் திரம் எனக்கு கற்றுக்கொடுத்தது.

நாம் சபானா படத்தில் ஆபத்து நேரத்தில் யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்று நேரத்தை வீணாக்காமல் சுய காலில் பலமாக நிற்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தேன். தனியாக இருக்கும்போது பயமின்றி வாழ அந்த கதாபாத்திரம்தான் கற்றுக்கொடுத்தது. இப்போதுகூட பல சந்தர்ப்பங்களில் நான் சபானாவாகவே மாறி பயத்தை விரட்டி அடிக்கிறேன்.

நிஜ வாழ்க்கையில் எனக்குள் இருக்கிற திறமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க இந்த கதாபாத்திரங்கள் உதவின. ராஷ்மி ராக்கெட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த மூன்றாவது நாளில் திடீரென்று எனது கால் செயல் இழந்து போனது. தசைகள் கடினமாக மாறியது. காயமும் ஏற்பட்டது. என்னால் நடக்கக்கூட முடியவில்லை. மீண்டும் நடக்க முடியாமல் ஆகி விடுமோ என பயந்தேன்.

நம்மை நம்பி பணம் முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமை என்ன ஆகும் என்றெல்லாம் கலங்கியபோது எனக்குள் என்னை அறியாமலேயே ஒரு சக்தி பிறந்தது. அதன்பிறகு பிசியோ தெரபி எடுத்து உடனே படப்பிடிப்பில் பங்கேற்றேன். அந்த படத்தில் நடித்தபோது நான் டாப்சி என்பதையே மறந்து ஒரு விளையாட்டு வீராங்கனையாகவே மாறினேன் என்பதுதான் உண்மை.

உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் ஆண், பெண் வித்தியாசம் அப்படியேதான் இருக்கிறது. ஆண்கள் என்றால் உயர்வானவர்கள் என்ற உணர்வு, மெஜாரிட்டி மக்களிடம் இருப்பதை நான் பார்க்கிறேன். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை களுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும். குறைந்தது நாளைய தலைமுறையினர் மத்தியிலாவது மாற்றம் வர வேண்டும். இதற்காக வீடியோக்கள் மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நான் முயற்சி செய்து வருகிறேன். ஒரு தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து இதை செய்து வருகிறேன்.

கல்வி மூலம் சொந்த காலில் நின்றால் ஏற்றத்தாழ்வை ஒழிக்க முடியும் என்பதை அதில் பெண்களுக்கு தெரியப்படுத்துகிறேன். பெண் குழந்தைகளை பள்ளியில் இருந்து திடீரென்று நிறுத்தி விடுவதை தடுக்கும் முயற்சி யிலும் ஈடுபட்டு இருக்கிறேன். இந்த சேவை பணிகளுக்காக ஆன்லைன் மூலமாக நன்கொடைகள் சேகரித்தும் கொடுக்கிறேன். இதுபோன்ற சேவை உணர்வு வர நான் நடித்த படங்கள்தான் காரணம்.

அவெஞ்சர்ஸ், சூப்பர் ஹீரோ போன்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. எல்லோரும் கனவு காணுங்கள். அதை நிஜமாக்குவதற்கு யாரோ வந்து நமக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்காமல் நீங்களே அந்த கனவுகளை நிறைவேற்ற உழையுங்கள்’’ என்று தன்னம்பிக்கை தருகிறார், டாப்சி.