சினிமா பாலிவுட்டில் முன்னிலை பெற்ற ‘டாப்சி பன்னு’


சினிமா பாலிவுட்டில் முன்னிலை பெற்ற ‘டாப்சி பன்னு’
x
தினத்தந்தி 27 Jun 2021 11:57 AM IST (Updated: 27 Jun 2021 11:57 AM IST)
t-max-icont-min-icon

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் வரும், ‘வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா.. உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா..’ என்ற பாடல் வரிகளுக்கு, அவ்வளவு பொருத்தமானவர், டாப்சி பன்னு.

டெல்லியில் பிறந்த இவர், பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். டெல்லியிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர், ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டதாரி. படித்து முடித்ததும் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றிய இவர், பணியாற்றியபடியே மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தார். இதன் பயனாக டாப்சிக்கு, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கைகூடியது.

இவர் திரைக்கு அறிமுகமான முதல் படம், ‘ஜூம்மான்டி நாதம்’ என்ற தெலுங்கு படமாகும். 2010-ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது. 2011-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் வரும் ஆங்கிலோ-இந்தியப் பெண் கதாபாத்திரத்திற்கு இவரது உருவம் அவ்வளவு பொருத்தமானதாக அமைந்திருந்தது. மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தத் திரைப்படத்தில், முதலில் திரிஷா தான் நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் திரிஷா அந்தப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்துதான், டாப்சிக்கு ‘ஆடுகளம்’ படத்தின் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த போதிலும், அவருக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ‘ஆடுகளம்’ படத்திற்குப் பிறகு, கடந்த 10 ஆண்டுகளில், ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா-2’, ‘வை ராஜா வை’ என விரல்விட்டு என்னும் வகையில்தான் தமிழ் சினிமா வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழில் ஓரிரு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

ஆனால் தெலுங்கு சினிமா டாப்சியை கைவிட வில்லை. அங்கு பல படங்களில் நடித்து வந்த அவர், தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதன் முதலாக டாப்சிக்கு, பாலிவுட் வாய்ப்பு கைவரப்பெற்றது. 1981-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘சாஷ்மே பத்தூர்’ என்ற திரைப்படத்தை, அதே பெயரில் மீண்டும் ரீமேக் செய்தார்கள். அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு டாப்சிக்கு கிடைத்தது. படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாகப் போகவில்லை. பின்னர் 2015-ம் ஆண்டு அக்‌ஷய்குமார் நடிப்பில் வெளியான ‘பேபி’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இருப்பினும் 2016-ம் ஆண்டில் அனிருதா ராய் சவுத்ரி இயக்கத்தில் வெளியான ‘பிங்க்’ படம் மூலமாக பாலிவுட் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் தனிக் கவனம் பெற்றார், டாப்சி பன்னு. இதில் அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன் வக்கீலாக நடித்திருந்தார். இந்தப் படம்தான் தமிழில், அஜித்குமார், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் வெளிவந்து வெற்றிபெற்றது.

‘பிங்க்’ திரைப்படத்திற்குப் பிறகு, பாலிவுட்டில் டாப்சிக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பாலிவுட் தயாரிப்பாளர்களும், டாப்சியை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய முன்வந்தனர். இதனால் 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சுமார் 4 அல்லது 5 படங்கள், டாப்சி நடிப்பில் வெளிவரத் தொடங்கின. அதே நேரம் நடிப்பிலும் அவர் மெருகேறிக்கொண்டே இருந்தார். இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் டாப்சி கவனம் செலுத்தினார். 2019-ம் ஆண்டு வெளியான ‘சாண்ட் கி ஆன்ங்’ படத்தில் வயதான தோற்றத்தில் நடித்தார். இது வயோதிக காலத்தில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக அளவில் சாதனைப் படைத்த இரண்டு இந்தியப் பெண்களைப் பற்றிய உண்மைக் கதையாகும். இதில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், டாப்சி.

இதையடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும், வித்யா பாலன், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் ஆகியோரின் வரிசையில் டாப்சியும், பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக மாறியிருக்கிறார். 2021-ல் டாப்சிக்கு படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவர் நடிப்பில் பல படங்கள் வரிசையாக களம் இறங்க காத்திருக்கின்றன.

அந்த வரிசையில், ‘ஹசீன் தில்ருபா’, ‘ராஷ்மி ராக்கெட்’, ‘லூப் லாபேடா’, ‘டோபாரா’, ‘சபாஷ் மிது’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவை அனைத்துமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையம்சம் கொண்டவைதான். இதில் ‘சபாஷ் மிது’ திரைப்படம், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் மிதாலிராஜ், வாழ்க்கையைப் பற்றியதாகும். இதற்காக கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் டாப்சி, அந்த பயிற்சியை, தான் நடிக்கும் கதாபாத்திரமான மிதாலி ராஜிடம் இருந்தே பெற்றிருப்பது கவனத்திற்குரியது.

இதன் மூலமாக பாலிவுட்டில் அதிக முக்கியத்துவம் உள்ள கதாநாயகியாக மாறியிருக்கிறார், டாப்சி பன்னு.

Next Story