மூத்த நடிகர்களுடன் ஜோடி போடும் ‘சோனாக்‌ஷி சின்ஹா’


மூத்த நடிகர்களுடன் ஜோடி போடும் ‘சோனாக்‌ஷி சின்ஹா’
x
தினத்தந்தி 4 July 2021 1:53 PM GMT (Updated: 2021-07-04T19:23:44+05:30)

பாலிவுட்டை பொறுத்தவரை பெரும்பாலான கதாநாயகிகள், ‘ஜீரோ சைஸ்’ என்று சொல்லப்படும் ஒல்லியான இடுப்பையும், குச்சி போன்ற உடல் வாகையும் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

பூசினாற் போன்ற உடலமைப்பைக் கொண்ட நடிகைகள் வெகுசிலரே இருப்பார்கள். அப்படி இருந்தாலும் அவர்களை ரசிக்கும் ரசிகர்கள் குறைவாகவே இருப்பார்கள். அந்த கணிப்பில் இருந்து விதிவிலக்காக மாறி, பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர், வித்யாபாலன். இவருக்கு அடுத்ததாக பூசினாற் போன்ற உடலமைப்பைக் கொண்ட பாலிவுட் நடிகை என்றால், அது சோனாக்‌ஷி சின்ஹா தான்.

பீகார் மாநிலம் பாட்னாவை பிறப்பிடமாகக் கொண்ட சோனாக்‌ஷி சின்ஹாவின், தந்தை சத்ருகன் சின்ஹா, தாய் பூனம் சின்ஹா ஆகியோரும் புகழ்பெற்ற நடிகர்- நடிகைதான். 2005-ம் ஆண்டு வெளியான, ‘மேரா தில் லேகே தேகோ’ என்ற படத்தின் வாயிலாக காஸ்ட்டியூம் டிசைனராகத்தான், சோனாக்‌ஷி சின்ஹாவின் திரைப்பயணம் தொடங்கியது. அதன்பின்னர் 2010-ம் ஆண்டு ‘தபாங்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கானுடன் நடித்தார், சோனாக்‌ஷி சின்ஹா. முதல் படமே அவருக்கு, சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. அதோடு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘தபாங்’, தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படம் தமிழில், ‘ஒஸ்தி’ என்ற பெயரில் சிலம்பரசன் நடிப்பில் வெளியானது.

2012-ம் ஆண்டு, அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக இவர் நடித்த ‘ரவுடி ரத்தோர்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இது ‘பாகுபலி’ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியாகி தெலுங்கில் அதிரிபுதிரி வெற்றியைப் பெற்ற ‘விக்ரமார்க்குடு’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இதை தமிழில் கார்த்தி நடிப்பில் ‘சிறுத்தை’ என்ற பெயரில் எடுத்திருந்தனர். தொடர்ந்து வரிசையாக ‘தபாங்-2’, ரன்வீர் சிங்குடன் ‘லூதெரா’, சயீப் அலிகானுடன் ‘புல்லட் ராஜா’, ஷகீப் கபூருடன் ‘ஆர்.ராஜ்குமார்’, அஜய்தேவ்கனுடன் ‘ஆக்‌ஷன் ஜாக்‌ஷன்’ என்று பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டார். 2016-ம் ஆண்டு சோனாக்‌ஷி சின்ஹாவை கதையின் நாயகியாகக் கொண்டு ‘அகிரா’ என்ற படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இந்தப் படம் ஓரளவு பெற்றியைப் பெற்றது. இது 2011-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மவுனகுரு’ படத்தின் ரீமேக் ஆகும். இதில் வரும் ஆண் கதாபாத்திரத்தை தான், பெண்ணாக உருவகப்படுத்தி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து படங்கள் வரை தன் கைவசம் வைத்து நடித்துக் கொண்டிருந்த சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு, கொரோனா காலகட்டம் மிகவும் கடுமையானதாகத்தான் இருந்திருக்கிறது. கடந்த ஆண்டு (2020), நவ்சுதீன் சித்திக் நடிப்பில் வெளியான ‘ஹூம்கேது’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த படம் மட்டுமே வெளியானது. மேலும் அவரது கைவசம் பாலிவுட்டில், ‘புஜ்: தி பிரைட் ஆப் இந்தியா’ என்ற படம் மட்டுமே உள்ளது. இது இந்திய விமானப்படையால் நிகழ்த்தப்பட்ட போர் குறித்த படமாகும். இதில் அஜய்தேவ்கன் ஜோடியாக, சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்தே, அவருக்கு பாலிவுட்டில் படங்களின் வரவு இருக்கும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய சினிமாவில் உள்ள மூத்த நடிகர்களுடன் ஜோடி போடுவதற்காக அழைப்பு, அவருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. 2014-ம் ஆண்டு தனது தந்தையின் நண்பரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த ஒரே ஒரு தென்னிந்திய சினிமாவாகும். இதற்கிடையில் தெலுங்கு சினிமாவில் இருந்தும், சோனாக்‌ஷியிடம் கால்ஷீட் கேட்டு பலரும் காத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் தெலுங்கு சினிமாவில் மிகவும் மூத்த நாயகர்களாக இருப்பவர்களுக்கு ஜோடியாகத்தான் அவரை நடிக்க கேட்டிருக்கிறார்களாம். தெலுங்கில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றப் படம், ‘சோக்கடே சின்னி நாயனா.’ இந்தப் படத்தில் நாகர்ஜூனாவும், அவருக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணனும் நடித்திருந்தனர்.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்தப் படத்தில் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக நடிக்க, சோனாக்‌ஷி சின்ஹாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். 61 வயதான நாகர்ஜூனாவுடன் நடிக்க எந்த தயக்கமும் காட்டவில்லையாம், சோனாக்‌ஷி. அதே போல், சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவும் அவரை கேட்டிருக்கிறார்கள். 65 வயதான சிரஞ்சீவி, தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் முடிந்ததும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘லூசிபர்’ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான முதல்கட்ட பணிகள் முடிவதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால், குறைவான கால்ஷீட்டை ஒதுக்கி ஒரு படத்தில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தை மைத்ரி மூவிஸ் தயாரிப்பில், பாபி என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கவும் சோனாக்‌ஷி சின்ஹா ஒப்புக்கொண்டதாக, தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story