நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிலதிபர் புகார்; மோசடி வழக்கு பதிவு


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 5 March 2020 10:06 PM IST (Updated: 5 March 2020 10:06 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புனே,

இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி.  இவர் தமிழில், விஜய் நடித்த குஷி மற்றும் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.  இவரும், இவரது கணவர் மற்றும் தொழிலதிபரான ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் சத்யுக் தங்கம் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிறுவனத்தில் கடந்த 2014ம் ஆண்டு சத்யுக் தங்க திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  இதில், சத்யுக் தங்க அட்டை வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டுவாழ் தொழிலதிபர் சச்சின் ஜோஷி என்பவர் அன்றைய விலையில், 5 வருட திட்டத்தில் ரூ.18.58 லட்சம் கொடுத்து ஒரு கிலோ தங்கம் வாங்கியுள்ளார்.  இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் இருவரும் தங்க திட்டத்தில் மோசடி செய்து விட்டனர் என போலீசில் ஜோஷி புகார் அளித்து உள்ளார்.

அந்த புகாரின்படி, 5 வருட முடிவில் அந்நிறுவனத்திடம் ஜோஷி தொடர்பு கொண்டபொழுது அந்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என பதில் கிடைத்து உள்ளது.  இதனால் அதிர்ந்த ஜோஷி பின்னர் வலைதளத்தில் புதிய முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்று விசாரித்ததில், அப்படி ஒரு நிறுவனம் இல்லை என கூறியுள்ளனர்.  இதுபோன்று வலைதளம் வழியே கிடைத்த பல முகவரிகளை அறிந்து சென்றும், அவற்றில் தோல்வியே கிடைத்து உள்ளது.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மே மாதத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியும், கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் நிறுவனத்தின் இயக்குனர் பதவிகளில் இருந்து விலகி உள்ளனர்.  கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அடிப்படையில் கிடைத்த இந்த விவரங்களை அறிந்த பின்பே ஜோஷி அவர்கள் மீது போலீசில் புகார் அளித்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.  இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.

Next Story