நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பால் மரணம்


நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பால் மரணம்
x
தினத்தந்தி 17 Nov 2021 9:01 AM GMT (Updated: 17 Nov 2021 9:01 AM GMT)

இயக்குனரும், நடிகருமான ஆர்.என்.ஆர் மனோகர் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

சென்னை,

1993ம் ஆண்டு வெளியான 'பேண்டு மாஸ்டர்' படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு, ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான 'கோலங்கள்' படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

அந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த 'தென்னவன்' படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.

2009ம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த 'மாசிலாமணி' படத்தை இயக்கினார். அதன் பிறகு நந்தா நடிப்பில் வெளியான 'வேலூர் மாவட்டம்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது தவிர 'சலீம்', 'என்னை அறிந்தால்', 'நானும் ரவுடிதான்', 'வேதாளம்', 'மிருதன்', 'கைதி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.என்.ஆர்.மனோகரின் மகன் ரஞ்சன் கடந்த 2012 ஆகஸ்ட் 16 அன்று சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் நீச்சல்குளத்தில் மூழ்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

Next Story