இதற்குமேலும் 'இந்தி'யா? தாங்குமா இந்தியா? - வைரமுத்து டுவீட்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 9 April 2022 10:39 AM IST (Updated: 9 April 2022 10:39 AM IST)
t-max-icont-min-icon

மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர, திணிப்பு சார்ந்ததல்ல என்று வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை, 

நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37-வது கூட்டத்தின் போது அதன் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா இந்தி மொழியை வளர்ப்பது குறித்து விளக்கினார். 

இது தொடர்பாக பேசிய அவர், "நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பிற மொழிகளை பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள் உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும்.

இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாவிட்டால், அது பரவாது. மத்திய மந்திரி சபையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் தற்போது இந்தியில்தான் தயாரிக்கப்படுகின்றன. 

நாட்டின் 8 வடகிழக்கு மாநிலங்களில் 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். வடகிழக்கை சேர்ந்த 9 பழங்குடி இனங்கள் தங்கள் பேச்சுவழக்கு எழுத்துகளை தேவநாகரிக்கு மாற்றியுள்ளனர்" என்று அமித்ஷா தெரிவித்திருந்தார். 

அவரது இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "வடக்கே வாழப்போன தமிழர், இந்தி கற்கலாம். தெற்கே வாழவரும் வடவர், தமிழ் கற்கலாம்.

மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர, திணிப்பு சார்ந்ததல்ல. வடமொழி ஆதிக்கத்தால், நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம். இதற்குமேலும் இந்தியா? தாங்குமா இந்தியா?" என்று கூறியுள்ளார்.

Next Story