சூர்யாவின் 'சூரரைப் போற்று' அக்டோபர் 30ல் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது


சூர்யாவின் சூரரைப் போற்று அக்டோபர் 30ல் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது
x
தினத்தந்தி 22 Aug 2020 8:28 AM GMT (Updated: 22 Aug 2020 8:43 AM GMT)

'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ல் வெளியிடப்படுகிறது என சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்துள்ள சூரரை போற்று படம் கொரோனா அச்சுறுத்தலால் திரைக்கு வருவதில் தாமதமானது. தற்போது புதிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் ரிலீசாகி வருகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து சூர்யாவின் சூரரை போற்று படத்தை தியேட்டரில் வெளியிடமாட்டோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.

இந்தநிலையில் ஆகஸ்ட் 13-ம் தேதி சூரரை போற்று படத்தின் தணிக்கை விவரங்கள் வெளியானது.  அதில் படம் 153 நிமிடங்கள் ஓடுகிறது. இதை பார்த்த பலரும் சூரரை போற்று படம் இணையதளத்தில் வெளியாகிறதா? என்று கேள்வி எழுப்பினார்கள். படம் ஒ.டி.டியில் வெளியாகப்போகிறது என்ற தகவலும் இணையதளத்தில் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர்.  ‘சூரரை போற்று’ படத்தை ஓ.டி.டியில் வெளியிடும் திட்டம் இல்லை. தியேட்டரில் தான் ரிலீசாகும். கொரோனா ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ல் வெளியிடப்படுகிறது என்றும்,  தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த முடிவை திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும் என சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து ரூ.5 கோடியை பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  பொதுமக்கள், திரையுலகை சார்ந்தவர்கள், கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும்  திரையரங்குகளில் தற்போது திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உள்ளதாகவும் கடுமையான உழைப்பில் தயாரான படங்களை, சரியான நேரத்தில் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என சூர்யா தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகரின் திரைப்படம் முதல்முறையாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story