இந்திய 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி நீக்கம் குறித்து தெண்டுல்கர் கருத்து


இந்திய 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி நீக்கம் குறித்து தெண்டுல்கர் கருத்து
x
தினத்தந்தி 2 Nov 2018 2:09 PM GMT (Updated: 2 Nov 2018 2:09 PM GMT)

டோனி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெண்டுல்கர் இந்திய அணி தேர்வு குழுவினரின் மனநிலை என்ன? என கேள்வியை எழுப்பியுள்ளார்.


மும்பை, 


20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து டோனி நீக்கப்பட்டார். இதுதொடர்பாக விராட் கோலி விளக்கம் அளிக்கையில், அணியில் டோனி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழுவினர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன். நீக்கம் முடிவு எடுப்பதற்கு முன்பாக தேர்வாளர்கள் முதலில் அவரிடம் தான் பேசியிருக்கிறார்கள். எனவே அது குறித்து நான் இங்கு உட்கார்ந்து பேசுவதற்கு அவசியம் இருப்பதாக தெரியவில்லை.

 டோனி சம்பந்தமாக தேர்வாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. இந்த விஷயத்தில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை உண்மை அல்ல என்று உறுதி அளிக்கிறேன். டோனி இன்னும் இந்த அணியில் முக்கியமான வீரராகத் தான் இருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரிஷாப் பான்ட் போன்ற இளம் வீரர்கள் அதிக வாய்ப்பு பெற்றால் நன்றாக இருக்கும் என்று டோனி கருதுகிறார். ஒரு நாள் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த கோணத்தில் பார்த்தால் அவர், இளம் வீரர்களுக்கு உதவுவதற்கு முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது. மற்றவர்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை என்றார். 

டோனி நீக்கம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கரிடம் கருத்து கேட்ட போது பதில் அளிக்கையில், ‘இந்திய அணி தேர்வு குழுவினரின் மனநிலை என்ன? என்பது எனக்கு தெரியாது. அது குறித்து நான் கருத்து சொல்லி தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க ஒருபோதும் விரும்பியதில்லை. ஓய்வறையில் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுவினருக்குள் நடைபெறும் வி‌ஷயங்கள் அவர்களுக்குள் தான் இருக்க வேண்டும். அவர்கள் என்ன திட்டமிட்டாலும், எந்த மாதிரியான முடிவு எடுத்தாலும் அது நாட்டின் சிறந்த நலனை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார். 

Next Story