ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
மும்பை,
8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.
இந்த கிரிக்கெட் திருவிழாவில், நேற்று மாலை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் கோதாவில் குதித்தன. இது மும்பை அணியின் 200-வது (சாம்பியன்ஸ் லீக் போட்டி யையும் சேர்த்து) ஆட்டமாகும். ராஜஸ்தான் அணியில் இரு மாற்றமாக காயமடைந்த பென் ஸ்டோக்சுக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டோனும் (இங்கிலாந்தை சேர்ந்தவர்), ரியான் பராக்குக்கு பதிலாக கே.கவுதமும் சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில், தசைப்பிடிப்பால் முந்தைய ஆட்டத்தில் ஆடாத கேப்டன் ரோகித் சர்மா திரும்பினார். சித்தேஷ் லாட் நீக்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்குக்கு உகந்த இந்த மைதானத்தில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணிக்கு வலுவான அஸ்திவாரம் உருவாக்கி தந்தனர். கவுதம் ஓவரில் டி காக் சிக்சர், பவுண்டரி விரட்ட, தவால் குல்கர்னியின் ஓவரில் ரோகித் சர்மா 3 பவுண்டரி சாத்தினார். தொடர்ந்து ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டிய வண்ணம் இருந்தனர்.
ரோகித் சர்மா 44 ரன்னில் இருந்த போது சுழற்பந்து வீச்சாளர் கவுதம் பந்து வீச்சில் சில அடி இறங்கி வந்து விளாச முயற்சித்தார். ஆனால் பந்து லெக்-சைடு வீசப்பட்டதால் சுதாரித்துக் கொண்ட ரோகித் சர்மா பேட்டுக்கு பதிலாக காலால் பந்தை உதைத்து ‘ஸ்டம்பிங்’ ஆபத்தில் இருந்து தப்பினார். ஆனாலும் அடுத்து ஓவரில் ரோகித் சர்மா (47 ரன், 32 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ரன்வேகம் சற்று குறைந்தது. அதாவது 10 முதல் 15 ஓவர்களில் வெறும் 34 ரன் மட்டுமே எடுத்தனர். மறுமுனையில் அரைசதத்தை கடந்த குயின்டான் டி காக் 81 ரன்களில் (52 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். இதற்கிடையே, பொல்லார்ட் (6 ரன்) ஏமாற்றம் அளித்தாலும் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா (28 ரன், 11 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஓரளவு ஸ்கோரை அதிகரிக்க செய்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.
அடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில், கேப்டன் ரஹானேவும், ஜோஸ் பட்லரும் அட்டகாசப்படுத்தினர். முதல் ஓவரிலேயே கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்த ரஹானே, அதிரடி காட்டினார். பட்லரும் துவம்சம் செய்ய ஸ்கோர் மளமளவென எகிறியது. ரன்ரேட் 10 ரன் வீதம் நகர்ந்தது. அணியின் ஸ்கோர் 60 ரன்களாக உயர்ந்த போது, ரஹானே 37 ரன்களில் (21 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) குருணல் பாண்ட்யாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
தொடர்ந்து பட்லர், ருத்ரதாண்டவம் ஆடினார். ராகுல் சாஹர், ஹர்திக் பாண்ட்யாவின் ஓவர்களில் சிக்சரை பறக்கவிட்ட பட்லர், வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பை கதறடித்தார். அவரது ஒரே ஓவரில் மட்டும் 28 ரன்கள் (6,4,4,4,4,6) திரட்டி மிரள வைத்தார். இதற்கு அடுத்த ஓவரில் பட்லர் 89 ரன்களில் (43 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.
பட்லர் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி சுலபமாக வெற்றிக்கனியை பறித்து விடும் என்றே தோன்றியது. ஆனால் அவர் பெவிலியன் திரும்பியதும், மும்பை பவுலர்கள் கொடுத்த குடைச்சலில் ராஜஸ்தான் கொஞ்சம் வெலவெலத்து போனது என்றே சொல்ல வேண்டும். கணிசமான பங்களிப்பை அளித்த சஞ்சு சாம்சன் 31 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அதைத் தொடர்ந்து குருணல் பாண்ட்யா ஒரே ஓவரில் திரிபாதி (1 ரன்), லிவிங்ஸ்டோனுக்கு (1 ரன்) ‘செக்’ வைத்தார். 19-வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ராவும் மிரட்டினார். முதல் பந்தில் ஸ்டீவன் சுமித்தை (12 ரன்) காலி செய்தார். ஆனால் இந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்ரேயாஸ் கோபால் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் நழுவ விட்டார்.
இறுதி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. இதனால் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா வீசினார். முதல் பந்தை சந்தித்த கோபால் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்ததோடு 2 ரன் எடுத்தார். 2-வது பந்தில் ரன் எடுக்காத அவர் 3-வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி திரிலிங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. மும்பை அணிக்கு இது 3-வது தோல்வியாகும். பீல்டிங்கில் மட்டும் மும்பை அணி கச்சிதமாக செயல்பட்டு இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.
ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா (சி) பட்லர் (பி)
ஆர்ச்சர் 47
குயின்டான் டி காக் (சி) பட்லர்
(பி) ஆர்ச்சர் 81
சூர்யகுமார் யாதவ்(பி)குல்கர்னி 16
பொல்லார்ட் (சி) கோபால் (பி)
ஆர்ச்சர் 6
ஹர்திக் பாண்ட்யா(நாட்-அவுட்) 28
இஷான் கிஷன் (சி) பட்லர்
(பி) உனட்கட் 5
குருணல் பாண்ட்யா(நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 4
மொத்தம் (20 ஓவர்களில்
5 விக்கெட்டுக்கு) 187
விக்கெட் வீழ்ச்சி: 1-96, 2-117, 3-136, 4-163, 5-175
பந்து வீச்சு விவரம்
கவுதம் 3-0-39-0
தவால் குல்கர்னி 4-0-38-1
ஜோப்ரா ஆர்ச்சர் 4-0-39-3
உனட்கட் 4-0-36-1
ஸ்ரேயாஸ் கோபால் 4-0-21-0
லிவிங்ஸ்டோன் 1-0-13-0
ராஜஸ்தான் ராயல்ஸ்
ரஹானே (சி) சூர்யகுமார் (பி)
குருணல் 37
பட்லர்(சி)சூர்யகுமார்(பி)சாஹர் 89
சஞ்சு சாம்சன் எல்.பி.டபிள்யூ
(பி) பும்ரா 31
ஸ்டீவன் சுமித் (சி) கிஷன்
(பி) பும்ரா 12
திரிபாதி(சி)ஹர்திக்(பி)குருணல் 1
லிவிங்ஸ்டோன் (பி) குருணல் 1
ஸ்ரேயாஸ் கோபால்(நாட்-அவுட்) 13
கே.கவுதம் (நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 4
மொத்தம் (19.3 ஓவர்களில்
6 விக்கெட்டுக்கு) 188
விக்கெட் வீழ்ச்சி: 1-60, 2-147, 3-170, 4-171, 5-174, 6-174
பந்து வீச்சு விவரம்
பெரேன்டோர்ப் 3-0-31-0
அல்ஜாரி ஜோசப் 3-0-53-0
ராகுல் சாஹர் 4-0-34-1
பும்ரா 4-0-23-2
குருணல் பாண்ட்யா 4-0-34-3
ஹர்திக் பாண்ட்யா 1.3-0-11-0
Related Tags :
Next Story