இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் ஓய்வு அறிவிப்பு


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் ஓய்வு அறிவிப்பு
x
தினத்தந்தி 7 March 2020 9:19 AM GMT (Updated: 7 March 2020 11:57 PM GMT)

அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் நேற்று அறிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த வாசிம் ஜாபர் 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். 31 டெஸ்டில் ஆடியுள்ள அவர் 5 சதம், 11 அரைசதம் உள்பட 1,944 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளார்.

2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட வாசிம் ஜாபர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி பல்வேறு சாதனைகள் படைத்தார். 42 வயதான ஜாபர் முதல் தர போட்டிகளில் மும்பை அணிக்காக நீண்ட காலம் விளையாடினார். 260 முதல்தர போட்டியில் விளையாடி இருக்கும் அவர் 19,410 ரன்கள் குவித்துள்ளார். அதிக ரஞ்சி போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரிய அவர் அந்த போட்டியில் 12,000-க்கும் அதிகமாக ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக ஜாபர் விதர்பா அணிக்காக விளையாடி வந்தார்.

இந்த நிலையில் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். ஜாபர் கூறுகையில் ‘எல்லா வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுகிறேன். அழகான இந்த கிரிக்கெட் ஆட்டத்தை விளையாட எனக்கு திறமையை அளித்த சர்வ வல்லமையுள்ள அல்லாவுக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது ஆட்டத்துக்கு ஊக்கம் அளித்த குடும்பத்தினருக்கும், என்னுடைய திறமையை பட்டை தீட்டிய பயிற்சியாளர்களுக்கும், என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த தேர்வாளர்களுக்கும், சக வீரர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியம், மும்பை மற்றும் விதர்பா கிரிக்கெட் சங்கத்துக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தெண்டுல்கர், டிராவிட், கங்குலி, கும்பிளே, லட்சுமண், ஷேவாக், டோனி உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் அணியின் ஓய்வறையை பகிர்ந்து கொண்டதை கவுரவமாக கருதுகிறேன்’ என்றார்.

Next Story