கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு


கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 13 March 2020 9:46 AM GMT (Updated: 13 March 2020 9:50 AM GMT)

கொரோனா எதிரொலியால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கும்.

மும்பை

வரும் 29 ஆம் தேதி தொடங்கி  மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 9 மாநிலங்களில் 60 ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தன. 

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடப்பு ஆண்டு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்தது. 

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால், மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. 

இந்த நிலையில், ஐபிஎல்-இன் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று கூடியது.  முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியாவில்  கொரோனா வைரஸ் (கோவிட் -19) பாதிப்பு காரணமாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.பி.எல் .2020 போட்டி  ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. மார்ச் 29 ஆம் தேதிக்கு பதில், ஏப்ரல் 15 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ கூறி உள்ளது.

 நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.



Next Story