மீண்டும் ரெய்னா..!! ஐ.பி.எல். தொடரில் புதிய அவதாரம்..?!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 March 2022 4:54 AM GMT (Updated: 16 March 2022 5:18 AM GMT)

சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் ஐபிஎல் போட்டிகளில் புதிய அவதாரம் ஒன்றை எடுக்க உள்ளார்.

புதுடெல்லி, 

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.

இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரெய்னாவை தக்கவைக்க முன்வரவில்லை. 

இந்த சூழலில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது. இதனால் ரெய்னா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த ஸ்டார் நிறுவனம் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை வழங்க முன்வந்தது. ரசிகர்களுக்காக அந்த பணியை ஒப்புக்கொண்டுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஐ.பி.எல். கிரிக்கெட் வர்ணனைக்கு மீண்டும் திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story