டோனிக்கு உதவி தேவைப்பட்டால் முதல் ஆளாக நிற்பேன்- கவுதம் கம்பீர்


Image Courtesy : PTI
x
Image Courtesy : PTI
தினத்தந்தி 20 March 2022 1:40 AM GMT (Updated: 20 March 2022 1:40 AM GMT)

டோனி உடனான மோதல் குறித்த வதந்திகளுக்கு கம்பீர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர்  கவுதம் கம்பீர். இவர் நீண்ட காலம் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இந்தியாவின் இரண்டு உலக கோப்பை தொடர்களிலும் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கம்பீர் ஓய்வை அறிவித்த பிறகு டோனிக்கும் கவுதம் கம்பீருக்கும் மோதல்கள் இருப்பதாகவும், கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் பல நேரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இது குறித்து தற்போது கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார். டோனியுடனான மோதல் குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறுகையில்" எனக்கு டோனியை  பிடிக்கவில்லை என்று கூறுவது தவறானது. தோனி மீது எனக்கு பரஸ்பரமான மரியாதை இருக்கிறது.

அது எப்போதும் நிலைத்திருக்கும். 138 கோடி மக்கள் முன்னிலையில் எங்கு வேண்டுமானாலும் என்னால் இதை சொல்ல முடியும். ஆனால், இந்தப் புகழ்ச்சி எல்லாம் டோனிக்கு ஒருபோதும் தேவை இல்லை என்று நம்புகிறேன்.

வாழ்க்கையில் எப்போதாவது டோனிக்கு உதவி தேவைப்பட்டால் அவருக்காக நான்தான் முதலில் நிற்பேன். ஏனெனில் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு மனிதராகவும் அவர் நிறைய செய்திருக்கிறார் " என தெரிவித்தார்.

டோனி குறித்து கம்பீர் இவ்வாறு பேசியுள்ளது இருவருக்கும் இடையே இருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Next Story