ஜாஸ் பட்லர் அதிரடி சதம் : டெல்லிக்கு 223 ரன்கள் இமாலய இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 22 April 2022 3:56 PM GMT (Updated: 22 April 2022 3:56 PM GMT)

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34-வது லீக் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ஏற்கனவே கைவசம் வைத்திருக்கும் பட்லர் இந்த போட்டியிலும் தொடக்கத்திலே அதிரடியை தொடங்கினார்.

டெல்லி அணியின் பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்தனர். சிறப்பாக விளையாடிய பட்லர் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவரை தொடர்ந்து தேவ்தத் படிக்கல் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இவர்களின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை கடந்தது. இந்த ஐபிஎல் தொடரின் தொடக்க வீரர்கள் அடிக்கும் முதலாவது 100 ரன்கள் பாட்னர்ஷிப் இதுவாகும். அதிரடியாக விளையாடிய படிக்கல் 54 ரன்களில் கலீல் அஹமத் பந்துவீச்சில் அவுட்டனார். பின்னர் அணியின் கேப்டன் சாம்சன் களமிறங்கினார்.

தொடர்ந்து சிக்சர்களாக பறக்கவிட்ட பட்லர் பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது அவரது 3-வது ஐபிஎல் சதமாகும். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக அவர் அடிக்கும் 2-வது ஐபிஎல் சதம் இதுவாகும்.

இவரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 18.4 ஓவரில் 200 ரன்களை கடந்தது. 65 பந்துகளில் 106 ரன்கள் குவித்த அவர் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

Next Story