சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்- பத்திரிகையாளர் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை ?
பத்திரிகையாளர் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புது டெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா. முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வுக்கு பிறகு இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் தேர்வுசெய்யப்படவில்லை.
தான் தேர்வு செய்யப்படாதது குறித்து அவர் பகிரங்க குற்றசாட்டை வெளியிட்டார். அதில் "தன்னை ஓய்வு பெறுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வற்புறுத்தியதாக தெரிவித்தார்".
இதன் பின்னர் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட விளையாட்டு பத்திரிகையாளர் குறுஞ்செய்தியின் மூலம் கேலி செய்தி மிரட்டியதாக விருத்திமான் சாஹா அடுத்த பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார்.
இது குறித்து அந்த பத்திரிகையாளர் உடன் நடந்த உரையாடல் குறுஞ்செய்தியை விருத்திமான் சாஹா வெளியிட்டார். ஆனால் அந்த பத்திரிகையாளர் பெயரை அப்போது அவர் வெளியிடவில்லை.
பின்னர் பிசிசிஐ விருத்திமான் சாஹா-விடம் முழுமையான விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குறித்து பேசிய சாஹா " எனக்கு தெரிந்த அனைத்தையும் நான் கமிட்டியின் முன் கூறிவிட்டேன். அந்த நிருபர் குறித்த விவரத்தையும் தெரிவித்து விட்டேன். ஆனால் இந்த விசாரணை முடியும் வரை இது குறித்து எதுவும் பேசவேண்டாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது " என தெரிவித்தார்.
பின்னர் போரியா மஜும்தார் என்ற அந்த பத்திரிகையாளர் தானாக முன்வந்து சாஹா உடன் நடந்த உரையாடல் குறித்து விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது பிசிசிஐ அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் இந்தியாவில் உள்ள எந்த மைதானத்திலும் நுழைய 2 ஆண்டுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், ஐசிசி போட்டியிலும் உள்ளே நுழைய அனுமதி வழங்ககூடாது என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுத உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story