தோனிக்கு சென்னை அணி குடும்பம் போன்றது- சுவாரசிய நிகழ்வு குறித்து பேசிய கெவின் பீட்டர்சன்..!!
கெவின் பீட்டர்சன் சென்னை அணியுடனான தோனியின் உறவு குறித்து பேசியுள்ளார்.
மும்பை,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இது வரை நடந்துள்ள 14 சீசன்களில் நடப்பு சாம்பியனான சென்னை அணி 4 முறை கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை அணியின் முதன்மை அதிகாரி சூதாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை செய்து உச்சநீதிமன்றம் அமைத்த குழு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அந்த 2 ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்டு அதற்கு மாற்று அணியாக புனே அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்றது. 2016 ஆம் ஆண்டு புனே அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2018 ஆம் ஆண்டு தடை முடிந்து மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பிய சென்னை அணி அந்த வருடத்தில் கோப்பை வென்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் தற்போது புனே அணியில் தோனியுடன் ஒன்றாக விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சென்னை அணியுடனான தோனியின் உறவு குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், " சென்னை அணியின் மஞ்சள் உடை எம்எஸ் தோனிக்கு மிகவும் பிடிக்கும். நான் அவருடன் புனே சூப்பர்ஜெயன்ட்ஸில் இரண்டு சீசன்களில் விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது, அவர்கள் 2018 ஆம் ஆண்டு மீண்டும் போட்டிக்கு வந்த போது சென்னைக்கு திரும்பியதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
அவர் நம்பமுடியாத வீரர். அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் அணிக்காக செய்தார். ஏனென்றால் அவர் அப்படிப்பட்டவர். அவர் எப்போதும் தனது 100 சதவீதத்தை கொடுப்பவர். சென்னை அணி அவருக்கு ஒரு குடும்பம் போன்றது" என தெரிவித்தார்.
Related Tags :
Next Story