ஷிகர் தவான்- லிவிங்ஸ்டன் அதிரடி : குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி..!!


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 3 May 2022 5:43 PM GMT (Updated: 3 May 2022 5:43 PM GMT)

குஜராத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது.

மும்பை,

10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன்  ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 9 ரன்கள் எடுத்திருந்த போது ரிஷி தவன் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார். 

அதை தொடர்ந்து சாஹா - சாய் சுதர்ஷன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரபாடா பந்துவீச்சில் சாஹா, அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் வெளியேறினார்.

கேப்டன் பாண்டியா 1 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஒரு முனையில் விக்கெட்கள் மளமளவென சரிய தொடங்கியது. இருப்பினும் ஒரு முனையில் நிதானமாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 42 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

சாய் சுதர்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஷமி பந்துவீச்சில் சங்வான்-யிடம் கேட்ச் கொடுத்து பேர்ஸ்டோவ் ஒரு ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ராஜபக்சா, தவான் உடன் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக விளையாடிய ராஜபக்சா குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த தவான் அரைசதம் கடந்து அசத்தினார்.  

5 பவுண்டரி 1 சிக்சருடன் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ராஜபக்சா ஆட்டமிழந்தார். பின்னர் லிவிங்ஸ்டோன் களமிறங்கினார். ஷமி வீசிய 16-வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்களை அவர் பறக்கவிட்டார்.

இறுதியில் 16 ஓவர்களில் பஞ்சாப் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. குஜராத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் நடப்பு தொடரில் குஜராத் அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

Next Story