"பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால் உலகம் அதோடு முடிந்து விடாது" - தோனி

நெட் ரன் ரேட் குறித்து தோனி பேசுகையில் தனக்கு கணக்கு பாடம் சரியாக வராது என பதில் அளித்தார்.
மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி டெவன் கான்வே அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
209 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில், " இது மிகச்சரியான போட்டியாக அமைந்தது. பேட்ஸ்மேன்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். இதுபோன்ற மிகப்பெரிய வெற்றி எங்களுக்கு உதவும். ஆனால் இந்த வெற்றி தொடக்கத்திலேயே எங்களுக்கு அமைந்திருக்க வேண்டும்.
இந்த போட்டியில் தொடக்கத்தில் கான்வே, கெய்க்வாட் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ரன்களை அதிகமாக குவிக்கும் போது பந்து வீச்சாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும் என்பதை உணர்ந்து செயல்பட்டோம்.
நெட் ரன் ரேட் எங்களுக்கு உதவாது என நினைக்கிறேன். நான் கணக்கு பாடத்தின் ரசிகன் அல்ல. பள்ளிக்கூடத்தில் கூட நான் கணிதத்தில் சிறப்பாக படித்ததில்லை. அதனால் பிற அணிகள் விளையாடும் போது அதனை நினைத்து நெருக்கடி அடைய தேவை இல்லை என்று நான் நினைக்கிறேன்.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் நல்லது. முன்னேறாவிட்டால் உலகம் ஒன்றும் முடிந்து விடாது. இனிவரும் போட்டிகளில் அதிகமான சிந்தனையிலோ அல்லது அழுதத்திலோ இருக்கக் கூடாது. அடுத்த போட்டியில் என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும்” என தோனி தெரிவித்தார்.
Related Tags :
Next Story