2 நாள் தொடர் மின்தடையால் தண்ணீருக்காக கிணறுகளை தேடிச்செல்லும் பொதுமக்கள்


2 நாள் தொடர் மின்தடையால் தண்ணீருக்காக கிணறுகளை தேடிச்செல்லும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 Dec 2016 9:45 PM GMT (Updated: 13 Dec 2016 8:34 PM GMT)

பூந்தமல்லி பகுதியில் 2 நாள் தொடர் மின் தடையால் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கிணறுகளை தேடி பொதுமக்கள் சென்று வருகின்றனர். குளம், குட்டை தண்ணீர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக ஊருக்கென்று பொதுவான கிணறு இருக்கும் அந்த

பூந்தமல்லி

பூந்தமல்லி பகுதியில் 2 நாள் தொடர் மின் தடையால் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க கிணறுகளை தேடி பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

குளம், குட்டை தண்ணீர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக ஊருக்கென்று பொதுவான கிணறு இருக்கும் அந்த கிணற்றில் பொதுமக்கள் அனைவரும் தேவைக்காக தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தார்கள். மேலும் குளம், குட்டை உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருவது வழக்கமாக இருந்தது.

காலம் மாற, மாற வீட்டிற்கு உள்ளேயும், தெருவிலும் ஆழ்குழாய்கிணறுகளில் மின் மோட்டார்கள் அமைத்து பொதுமக்கள் நீரின் தேவையை சமாளிக்க பழகிவிட்டார்கள். இதனால் பல இடங்களில் இருந்த பொதுகிணறுகள் தற்போது காணாமல் போய்விட்டன.

கிணறுகள் பயன்பாடு

சில விடுகளில் மட்டுமே இருந்த கிணறுகள் சிறிய அளவிலான உறை கிணறுகளாக உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையை உலுக்கி விட்டு சென்ற ‘வார்தா’ புயல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. வீடுகளில் உள்ள மின் மோட்டார்களை இயக்க முடியாததால் மக்கள் குளிக்க, குடிக்க தண்ணீர் இன்றி மிகுந்த சிரமம் அடைந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு தற்போது ஒரு சில வீடுகளில் உள்ள கிணறுகள் கை கொடுத்து வருகின்றன.

தாகம் தீர்க்கும் கிணறுகள்

பொதுமக்கள் தற்போது பலர் தங்களின் கைகளில் குடங்களை ஏந்திக்கொண்டு கயிறு மூலம் கிணற்றில் நீர் இறைத்து வீட்டுக்கு எடுத்து சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் அதிகளவில் பூந்தமல்லியில் வசித்து வருகின்றனர். இரண்டு நாட்களாக இருந்து வரும் மின்தடையால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையால் அப்பகுதியில் சில வீடுகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் பிடிக்க கூட்டம் அலைமோதுகிறது.


Next Story