குற்றாலத்தில் நடந்த வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது பரபரப்பு தகவல்


குற்றாலத்தில் நடந்த வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2016 1:00 AM IST (Updated: 28 Dec 2016 8:47 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் குற்றாலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் இசக்கி லிங்கேசுவரன் என்ற அரவிந்த் (வயது 19). இவர் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் வழியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் குற்றாலம் திருவள்ளுவர் நகர் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தென்காசி,

குற்றாலத்தில் நடந்த வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் படுகொலை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் இசக்கி லிங்கேசுவரன் என்ற அரவிந்த் (வயது 19). இவர் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் வழியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் குற்றாலம் திருவள்ளுவர் நகர் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அரவிந்தை கொலை செய்ய பயன்படுத்திய கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் அப்பகுதியில் சிற்றாற்றின் கரை ஓரத்தில் இருந்து குற்றாலம் போலீசார் கைப்பற்றினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்–இன்ஸ்பெக்டர் பாண்டித்துரை ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், குற்றாலம் மவுனகுருசாமி காலனியை சேர்ந்த ரத்தினவேல்பாண்டியன் மகன் மாணிக்கம் என்ற மகேஷ் (23), கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கோமதிமுத்துபுரம் சி.எஸ்.ஐ. கோவில் தெருவை சேர்ந்த மணவாளதாஸ் மகன் பிரவீன் (23) ஆகியோர் சேர்ந்து அரவிந்தை கொலை செய்தது தெரியவந்தது.

நண்பர்கள் 2 பேர் கைது

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் கீழ்கண்ட தகவல்கள் வெளிவந்தன.

அரவிந்த், மாணிக்கம், பிரவீன் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தனர். தற்போது, அரவிந்த் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் மாணிக்கம் வேறு ஒருவரின் செல்போனை அரவிந்திடம் கொடுத்து அதை விற்று பணம் பெற்றுச் சென்றார். பின்னர் மாணிக்கம், பிரவீன் ஆகியோர் அரவிந்த் கடைக்கு சென்று, பார்ட்டி வைக்கும் படி கேட்டு உள்ளனர். இதற்கு அரவிந்த் மறுத்துள்ளார். இதனால் 2 பேரும் சேர்ந்து அரவிந்திடம் தகராறு செய்தனர். அருகில் உள்ளவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் மாணிக்கம், பிரவீன் ஆகியோர் அரவிந்த் கடைக்கு சென்று, அவரை குற்றாலம் அருகே உள்ள திருவள்ளுவர்நகர் பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம், பிரவீன் ஆகியோர் சேர்ந்து அரவிந்தை கம்பு, கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாணிக்கம், பிரவீன் ஆகியோரை போலீசார் கைது செய்து, தென்காசி மாஜிஸ்திரேட்டு திரிவேணி முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

Next Story