போக்குவரத்து போலீசார் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்


போக்குவரத்து போலீசார் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 31 Dec 2016 10:45 PM GMT (Updated: 31 Dec 2016 1:15 PM GMT)

ராமநாதபுரம் போக்குவரத்து போலீசார் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விழிப்புணர்வு ஊர்வலம் 2016–ம் ஆண்டு முடிவடைந்து 2017–ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி விபத்தின்றி பயணம் செய்து உயிர்காக்கும் முயற்சி

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் போக்குவரத்து போலீசார் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

விழிப்புணர்வு ஊர்வலம்

2016–ம் ஆண்டு முடிவடைந்து 2017–ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி விபத்தின்றி பயணம் செய்து உயிர்காக்கும் முயற்சியாக தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து போலீசார் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று காலை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து நடைபெற்ற இந்த ஊர்வலத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:– சாலையில் நடைபெறும் விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களில் தான் அதிகம் நடக்கிறது. இந்த விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களை ஆய்வு செய்தால் அனைத்தும் தலைக்கவசம் அணியாமல் சென்றதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது. தலைக்கவசம் அணிவது உங்களின் உயிருக்கு மட்டுமல்லாது உங்களை நம்பி உள்ள குடும்பத்தினர் அனைவருடைய வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பாகும். தலைக்கவசம் அணிவதை சுமையாகவும், சிரமமாகவும் கருதுகின்றனர். இது உயிர்காக்கும் விசயம் என்பதை அனைவரும் உணர மறந்து விடுகின்றனர்.

துண்டு பிரசுரம்

உடலில் எந்த பாகத்தில் விபத்தின் போது பாதிப்பு ஏற்பட்டாலும் உரிய சிகிச்சை அளித்தால் பிழைத்து விடலாம். ஆனால், தலையில் அடிபட்டு பாதிக்கப்பட்டால் உடனடியாக மரணம் நிச்சயம். இதனால் உங்களின் உயிர் மீது அக்கறை கொண்டுதான் தலைக்கவசம் அணியவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இதற்காக மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு தலைக்கவசம் அணிவதை முறைப்படுத்தி வருகிறோம். போலீசாரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக போலீசார் தலைக்கவசம் அணிவதை முறைப்படுத்தவும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த புதிய புத்தாண்டில் விபத்தில்லா நிலையை ஏற்படுத்தவும், தலைக்காயத்தால் உயிரிழப்பை தடுக்கவும் அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்–இன்ஸ்பெக்டர் சங்கர், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்பட போலீசார் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரண்மனையை அடைந்தது. அங்கு போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.


Next Story