நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வேளாண் விற்பனை குழு வேண்டுகோள்


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வேளாண் விற்பனை குழு வேண்டுகோள்
x
தினத்தந்தி 31 Dec 2016 7:15 PM GMT (Updated: 31 Dec 2016 2:09 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் விற்பனை குழு கேட்டுக் கொண்டுள்ளது.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் விற்பனை குழு கேட்டுக் கொண்டுள்ளது.

எந்தவிதமான பிடித்தமும் கிடையாது


இதுதொடர்பாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நெல்லை விற்பனைக்குழு செயலாளர் டி.விஷ்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம், திசையன்விளை ஆகிய இடங்களிலும், தூத்துக்கடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம், கோவில்பட்டி, கழுகுமலை, கடம்பூர் ஆகிய இடங்களிலும் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நெல், பருத்தி, மிளகாய் வத்தல், மல்லி, உளுந்து, நிலக்கடலை உள்ளிட்டவற்றை இருப்பு வைக்கலாம்.

விளைபொருள் சேமிப்பு கிட்டங்கிகள், குளிர்பதன கிட்டங்கிகள், பரிவர்த்தனை கூடங்கள், சூரியசக்தி உலர்பான விற்பனைக்கூடங்கள் (விளாத்திகுளம், புதூர்), சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், இரும்பு அட்டகங்கள், கிட்டங்கி மற்றும் விளைபொருள் காப்பீடு, உழவர் நலநிதி திட்டம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தரகு, கமி‌ஷன் மற்றும் எந்தவிதமான பிடித்தமும் விவசாயிகளிடம் இருந்து செய்யப்படுவதில்லை.

சொந்த கட்டிடங்கள் இல்லாத திசையன்விளை, ஆலங்குளம், சிவகிரி மற்றும் திருவேங்கடம் ஒழுங்குமுறை விற்பனைகூடங்களில் திசையன்விளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மாவட்ட கலெக்டரால் இடம் ஒதுக்கீடு செய்து தரப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்து தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் ஒதுக்கீடு செய்து தரப்பட்டவுடன் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் வணிகர்களின் பயன்பாட்டிற்கு கட்டித் தரப்படும்.

விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள்

கிட்டங்கிகள், குளிர்பதன கிட்டங்கிகள், பரிவர்த்தனை கூடங்கள் போன்றவற்றை விவசாயிகளும், வணிகர்களும் குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள கிட்டங்கிகளில் விலை குறைந்த காலங்களில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். பின்னர் அவசர தேவைக்கு பொருளீட்டுக்கடன் விற்பனைக்குழு மற்றும் வங்கிகளின் மூலம் பெற்று விலை உயர்வு காலங்களில் விற்பனை செய்து அதிக லாபம் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காவல்கிணறு விலக்கில் தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியத்தால் தொடங்கப்பட்ட மலர் வணிக வளாகம், தோவாளையில் மலர் வணிக வளாகம் போன்ற வளாகங்களில் அமைந்துள்ள கடைகள், கிட்டங்கிகள், குளிர்பதன கிட்டங்கிகள், உலர்கலங்களை விவசாயிகள் மற்றும் வணிகர்கள் மிகவும் குறைந்த வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக தேங்காய், பருதத், நெல், முருங்கைக்காய், தக்காளி, மாங்காய், வெங்காயம் போன்ற காய்கனிகளையும் பேக்கிங் செய்வதற்கும், உரக்கடைகள், பூச்சிக்கொல்லி மருந்து கடைகள், வேளாண் கருவிகள், விற்பனை மற்றும் சர்வீஸ் போன்ற கடைகளை நடத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story