நான் இல்லை என்றால் ‘சித்தராமையாவால் வெற்றி பெற்றிருக்க முடியாது’ ஜனார்த்தன பூஜாரி பேட்டி


நான் இல்லை என்றால் ‘சித்தராமையாவால் வெற்றி பெற்றிருக்க முடியாது’ ஜனார்த்தன பூஜாரி பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2016 9:07 PM GMT (Updated: 2017-01-01T02:37:28+05:30)

‘நான் இல்லை என்றால் சித்தராமையாவால் வெற்றி பெற்றிருக்க முடியாது’ என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன பூஜாரி கூறினார். முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜனார்த்தன பூஜாரி, மங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது

மங்களூரு,

‘நான் இல்லை என்றால் சித்தராமையாவால் வெற்றி பெற்றிருக்க முடியாது’ என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன பூஜாரி கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜனார்த்தன பூஜாரி, மங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எதிர்ப்பு அதிகரிப்பு

முதல்–மந்திரி சித்தராமையாவின் பணிகள் குறித்து மக்களிடையே நடந்த கருத்துக்கணிப்பில் அவருக்கு 3–வது இடம் தான் கிடைத்துள்ளது. முதல் இடத்தில் எடியூரப்பாவும், 2–வது இடத்தில் குமாரசாமியும் உள்ளனர். இதில் இருந்தே சித்தராமையாவின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரியும். இந்த கருத்துக்கணிப்பின் முடிவு, சித்தராமையா மீது மக்களுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது. உங்களை (சித்தராமையா) விட சிறந்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்.

பதவியை தக்க வைக்க நீங்கள் காட்டும் சர்க்கசை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சித்தராமையாவுக்கு ஆட்சி அதிகாரம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான். சித்தராமையாவால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஆதலால் சித்தராமையா முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு விலக வேண்டும்.

வெற்றி பெற்றிருக்க முடியாது

தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை. சித்தராமையா தொடர்ந்து இதேபோன்று சர்வாதிகார போக்குடன் செயல்பட்டால் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி உறுதி. எத்தினஒலே குடிநீர் திட்டத்தை தொடங்கி இருப்பதால் சித்தராமையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோலார்–சிக்பள்ளாப்பூர் மக்களுக்கு உதவ வேறு வழியே இல்லையா?. அவர்களுக்கு வேறு வழியில் உதவுங்கள். சித்தராமையாவின் சர்வாதிகார போக்கால் மாநில மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சித்தராமையா ஆட்சி கட்டிலில் இருந்து விலக வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, சித்தராமையாவுக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்தேன். அப்போது, பிராமணர் மற்றும் லிங்காயத்து சமுதாய மக்கள் சித்தராமையா வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. நான் ஆதரவு கேட்டு சென்றதால், சித்தராமையாவுக்கு அவர்கள் வாக்களித்தனர். நான் இல்லை என்றால் சித்தராமையாவால் வெற்றி பெற்றிருக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story