சீமை கருவேல மரங்களை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தல்


சீமை கருவேல மரங்களை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும் கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 Dec 2016 10:48 PM GMT (Updated: 31 Dec 2016 10:48 PM GMT)

கரூர், சீமை கருவேல மரங்களை, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தியுள்ளார். சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி கரூர் மாவட்டத்தில் சீமை கரு

கரூர்,

சீமை கருவேல மரங்களை, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி

கரூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, பொதுப்பணித்துறை, பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மற்றும் பணிகள் நடைபெற்ற இடங்கள், நடைபெற உள்ள இடங்களை கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிலத்தடி நீருக்கும், விவசாயிகளுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக கோர்ட்டு உத்தரவுப்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கரூர் மாவட்டம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி மற்றும் நகர பகுதிகளையொட்டி உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உறுதுணை

அதன்படி கரூர் நகராட்சி சுங்ககேட் பகுதி, பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப்பகுதி, திருமாநிலையூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பின்பகுதி, சுக்காலியூர், வெள்ளியணை குளம் போன்ற பகுதிகளில் இப்பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணியின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.


இதைத்தொடர்ந்து இந்த பணிக்காக அமைக்கப்பட்ட தனி அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சீமை கருவேல மரங்கள் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அரசு சார்ந்த நிலங்களில் அரசு அலுவலர்கள் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்வதை போல், தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அகற்ற வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கோமகன், கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story